(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023, DC vs CSK 1st Innings: சென்னையின் Play-Off கனவை தடுக்குமா டெல்லி? 224 ரன்கள் இலக்கு..!
IPL 2023, DC vs CSK 1st Innings: சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் கான்வே 87 ரன்களும், ருத்ராஜ் 79 ரன்களும் அதிகபட்சமாக எடுத்து இருந்தனர்.
IPL 2023, DC vs CSK Score: 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று அதாவது மே மாதம் 20ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன் படி சென்னை அணியின் இன்னிங்ஸை இளம் இந்திய வீரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆடினர். ஐபிஎல் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு இது 50வது போட்டியாகும். இருவரும் போட்டியின் முதல் ஓவரில் மட்டும் சற்று நிதானமாக ஆடினர். அதன் பின்னர் டெல்லி அணியின் பந்து வீச்சை இருவரும் அடித்து நொறுக்கினர். இதனால் ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் என சீராக உயர்ந்து கொண்டு இருந்தது. 5 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்ட சென்னை அணி, பவர்ப்ளேவின் இறுதி ஓவரில் 2 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆனால் அதன் பின்னரும் இருவரும் அடித்து ஆட ஆரம்பித்தனர். இந்த போட்டியில் கான்வே அடித்த முதல் சிக்ஸர் இந்த தொடரின் 1000வது சிக்ஸராக பதிவானது.
குறிப்பாக போட்டியின் 10வது ஓவரை அக்ஷர் பட்டேல் வீசினார் இந்த ஓவரில் ருத்ராஜ் இரண்டு சிக்ஸர்களும், 12வது ஓவரை வீசிய குல்தீப் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் விளாசி மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களுக்கு பந்துகளை அனுப்பினார். ருதராஜ் மற்றும் கான்வே அடுத்தடுத்து அரைசதம் விளாசி சென்னை அணிக்கு வழு சேர்த்தனர். 50 பந்தில் 79 ரன்கள் சேர்த்த நிலையில் ருத்ராஜ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணியின் ரன் 141 ஆக இருந்தது.
அதன் பின்னர் கான்வேவுடன் கைகோர்த்த டூபே சென்னை அணியின் ரன்ரேட்டை மேலும் உயர்த்த ருத்ரதாண்டவ ஆட்டத்துக்கு அடி போட்டார். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய கான்வே டெல்லி அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களையும் தண்டிக்கும் படி ஆடினார். துபேவும் தனக்கு கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு விளாச சென்னை அணி 18வது ஓவரிலேயே 190 ரன்களைக் கடந்தது. ஆனால் அந்த ஓவரின் இறுதிப் பந்தில் தனது விக்கெட்டை டூபே தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களின் ஆரவத்துடன் தோனி களமிறங்கினார். ஆனால் அவரால் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. 19வது ஓவரின் தொடக்கத்தில் கான்வே தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் அந்த ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாச சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் கான்வே 87 ரன்களும், ருத்ராஜ் 79 ரன்களும் அதிகபட்சமாக எடுத்து இருந்தனர்.