Chris Gayle: ’கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் நான் சரியாக நடத்தப்படவில்லை’-குற்றம்சாட்டும் கிறிஸ் கெயில் !
அடுத்த முறை என்னை பஞ்சாப் அல்லது ஆர்சிபி அணி எடுத்தால் நன்றாக இருக்கும்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் யூனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெயில். இவர் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இதற்கு அவருடைய வயது ஒரு காரணமாக இருக்கும் என்று சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது தொடர்பாக கிறிஸ் கெயில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சரியாக நடத்தப்படவில்லை. கிரிக்கெட் விளையாட்டில் இவ்வளவு சாதித்த பிறகும் என்னை சரியாக நடத்தாத தொடருக்கு நான் ஏன் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதன்காரணமாகவே இந்தாண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் என்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை.
கிரிக்கெட் விளையாட்டிற்கு பிறகு வாழ்க்கை உள்ளது. அதை தற்போது நான் புரிந்து கொண்டு பழகி வருகிறேன். ஐபிஎல் தொடரில் நான் இதுவரை 3 அணிகளுக்காக விளையாடியுள்ளேன். கொல்கத்தா,ஆர்சிபி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளில் விளையாடினேன். இவற்றில் அடுத்த முறை என்னை பஞ்சாப் அல்லது ஆர்சிபி அணி எடுத்தால் நன்றாக இருக்கும். இந்த இரு அணிகளில் ஒரு அணிக்காக விளையாடி ஐபிஎல் பட்டத்தை வென்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோரை கிறிஸ் கெயில் தான் அடித்துள்ளார். அவர் 175 ரன்கள் விளாசி அந்தச் சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் ஐபிஎல் வரலாற்ரில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையை கெயில் தன்வசம் வைத்துள்ளார். அவர் 142 ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி 357 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் கெயில் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இவருக்கு பின்பு வெஸ்ட் இண்டீஸ் அணியில் களமிறங்கிய பிராவோ, பொல்லார்டு உள்ளிட்ட வீரர்கள் தங்களுடைய ஓய்வை அறிவித்து விட்டனர். எனினும் கெயில் இன்னும் தன்னுடைய ஓய்வை அறிவிக்கவில்லை. அவர் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்