IPL 2022: கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வரும்... 9 அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி இருக்கிறது?
கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு மீதம் இருக்கும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் காத்திருக்க வேண்டும்.
2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை முதல் அணியாக இழந்து அதிர்ச்சி அளித்திருக்கிறது. மீதம் இருக்கும் 9 அணிகள் எந்தெந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றிய அப்டேட்டை பார்க்கலாம்.
10 அணிகள் பங்கேற்றிருக்கும் ஐபிஎல் தொடரில், குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். பலம் வாய்ந்த குஜராத், ராஜஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. குஜராத் அணி இனி விளையாட இருக்கும் 6 போட்டிகளில் 1 போட்டியில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, 6 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில், எந்த அணி எத்தனை போட்டிகளில் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும் என்பதை பார்க்கலாம். ஏப்ரல் 28-ம் தேதி கொல்கத்தா, டெல்லி அணிகள் விளையாடிய போட்டிக்கு பிறகான புள்ளிப்பட்டியல் அப்டேட் இது.
அணி | வெற்றி பெற வேண்டிய போட்டிகள் | மீதம் இருக்கும் போட்டிகள் | தற்போதைய புள்ளி விவரம் |
குஜராத் டைட்டன்ஸ் | 1 | 6 | 14 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 2 | 6 | 12 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 3 | 6 | 10 |
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் | 3 | 6 | 10 |
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு | 3 | 5 | 10 |
பஞ்சாப் கிங்ஸ் | 4 | 6 | 8 |
டெல்லி கேப்பிடல்ஸ் | 4 | 6 | 6 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 5 | 5 | 6 |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 6 | 6 | 4 |
மும்பை இந்தியன்ஸ் | ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது | 6 | 0 |
லீக் சுற்று போட்டிகளின் முடிவில் டாப் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். தற்போதைய நிலவரத்தை வைத்து பார்க்கும்போது, குஜராத், ராஜஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத், லக்னோ, பெங்களூரு அணிகளுக்கு இடையே கடைசி இரண்டு இடத்தைப் பிடிப்பதற்காக கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. இதை தவிர, பஞ்சாப், டெல்லி அணிகள் இந்த பெரிய வெற்றிகளை பதிவு செய்து முன்னேற வேண்டி இருக்கும். கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு மீதம் இருக்கும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் காத்திருக்க வேண்டும்.