MI vs GT:ரோகித்,இஷான்,டிம் டேவிட் அதிரடி..கடைசி கடத்தில் கலக்கிய குஜராத்- 178 ரன்கள் இலக்கு !
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 177 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினார்.
கேப்டன் ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். குறிப்பாக இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி அசத்தினார். இதன்காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் 28 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசி ரோகித் சர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் சிக்சர் விளாசி அசத்தினார்.. அவரும் அதிரடியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 29 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் பொல்லார்டு சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 14 பந்துகளில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 16 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா மீண்டும் அதிரடி காட்ட தொடங்கினார். குறிப்பாக டிம் டேவிட் முகமது ஷமி பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகள் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா 21 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரி விளாசி 41* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்