MS Dhoni: மகேந்திர சிங் தோனி 'மாபெரும் தலைவன்' - ஆளும்போது மட்டுமல்ல விலகும்போதும் கூட!!
ஐ.பி.எல் சரித்திரம் கண்டிராத சாதனை கேப்டனாக சாம்பியனாக வெற்றிக் கோப்பையோடு தோனி கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு கை மாற்றிவிட்டிருக்கிறார்.
ஐ.பி.எல் 15 வது சீசன் ஆரம்பமாக இருக்கும் சூழலில் சென்னை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. சிஎஸ்கேவின் முகமாக முன் நின்று 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக அணியை வழிநடத்திய 'தலைவன்' தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். தோனியின் திடீர் முடிவின் பின்னணி என்ன?
2008 இல் ஐ.பி.எல் முதல்முதலாக தொடங்கப்பட்ட போது சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி என ஒவ்வொரு அணியும் தங்கள் மாநிலத்தின் அடையாளமாக இருக்கும் இந்திய சூப்பர் ஸ்டார்களை தங்கள் அணிக்கு கேப்டனாக ஒப்பந்தம் செய்துகொண்டது. சென்னைக்கு அப்படி ஒப்பந்தம் செய்து கொள்ள எந்த சூப்பர்ஸ்டார் வீரரும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் இளம் வீரராக உலகக்கோப்பையை வென்று வந்திருந்த தோனியை கேப்டனாக ஒப்பந்தம் செய்யும் முடிவுக்கு சென்னை வந்தது. ஆனாலும் அணி நிர்வாகத்துக்குள்ளேயே பல விவாதங்கள். நல்ல அனுபவமிக்க வேறு எதாவது வீரரை தேர்வு செய்யலாமே என பல வித யோசனைகள். முடிவில் கேப்டன் + விக்கெட் கீப்பர் + பேட்ஸ்மேன் என மூன்று விதமான ரோல்களையும் தோனி செய்ய முடியும் என்பதால் சமாதானமாகி அதிக விலை கொடுத்து தோனியை சென்னை ஏலத்தில் எடுத்தது. புது வரலாறு தொடங்கியது. முதல் சீசனிலேயே சிஎஸ்கே ரன்னர் அப். மூன்றாவது சீசனிலேயே சாம்பியன். நான்காவது சீசனில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன். சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி. சூதாட்டப்புகாரில் பலகட்ட சோதனைகளுக்கும் தடைகளுக்கும் பிறகு கம்பேக் கொடுத்த 2018 சீசனிலும் சாம்பியன்ஸ். அடுத்த சீசனில் ரன்னர் அப். மீண்டும் ஒரு சறுக்கல். சொதப்பலான பெர்ஃபார்மென்ஸ். சிஎஸ்கே சாம்ராஜ்யமே சரிந்ததென விமர்சனம். இப்போதும் துவண்டு விடவில்லை. வீழ்ந்து போன துபாயிலேயே ஃபீனிக்ஸ் பறவையாக வெகுண்டெழுந்து 2021 சீசனிலிலும் சாம்பியன்ஸ். ஐ.பி.எல் சரித்திரம் கண்டிராத சாதனை கேப்டனாக சாம்பியனாக வெற்றிக் கோப்பையோடு தோனி கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு கை மாற்றிவிட்டிருக்கிறார்.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகவே இதை பார்க்க வேண்டும். ஐ.பி.எல் 15 வது சீசனை எட்டிவிட்டது. இந்த 15 ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கியிருக்கும் கேப்டன்களின் எண்ணிக்கை 13. டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டன்களின் எண்ணிக்கை 12. 5 முறை கோப்பையை வென்று சென்னையின் பரம எதிரியாக இருக்கும் மும்பையே இதுவரை 7 கேப்டன்களுக்கும் மேல் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்திய கேப்டன்களின் எண்ணிக்கை வெறும் 2 மட்டுமே. ஒருவர் மகேந்திர சிங் தோனி. இன்னொருவர் சுரேஷ் ரெய்னா. தோனிதான் 95% போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். தோனியால் ஆட முடியாத ஒன்றிரண்டு போட்டிகளுக்கு மட்டுமே ரெய்னா கேப்டனாக இருந்திருக்கிறார். இப்போது ஜடேஜா மூன்றாவது கேப்டன் மட்டுமே.
கேப்டன்சியில் ஆகட்டும் அணி கட்டமைப்பில் ஆகட்டும் இரண்டிலுமே சிஎஸ்கே மற்றும் தோனி இரண்டு தரப்புமே எப்போதும் ஒருமித்த குரலுடன் சீரான உறுதியான முடிவுகளையே எடுத்திருக்கின்றனர். ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக அதிக நம்பிக்கையை வைத்திருந்தனர். அதனால்தான் முழுப்பொறுப்பையும் தோனி கையில் கொடுத்துவிட்டு 'தலைவன் இருக்கிறான்' எனக் கூறி அவருக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொடுத்தனர். அந்த நம்பிக்கைக்கான செழிப்பான அறுவடையை தோனி சிஎஸ்கேவிற்கு செய்து கொடுத்தார். எப்படி கேப்டன் பதவியை ஏற்பதும் அணியை வெற்றிகரமாக வழிநடத்துவதும் ஒரு கலையோ அதேபோல கேப்டன் பதவியிலிருந்து விலகுவதும் ஒரு கலையே. எந்த சலனமும் இல்லாமல் பேட்டனை அடுத்தக்கட்ட வீரர்களுக்கு கைமாற்றி விட வேண்டும். தோனி அதை பெரும்பாலான சமயங்களில் மிகச்சரியாக செய்திருக்கிறார்.
2015 உலகக்கோப்பை முடிந்தவுடன் நீங்கள் ஓய்வு பெறுவீர்களா? கேப்டன் பதவியிலிருந்து விலகுவீர்களா? என கேட்கப்பட்டதற்கு 2019 உலகக்கோப்பை வரை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கூறிய அதே தோனிதான் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக ஒரு மாலை வேளையில் கேப்டன் பதவியிலிருந்து விலகி பேட்டனை விராட் கோலியின் கைகளுக்கு மாற்றிவிட்டார். அடுத்த தலைமுறையிடம் அணியை ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என உணர்ந்து எந்த சர்ச்சைகளுக்கும் வழிவகுக்காமல் தோனி எடுத்த மகத்தான முடிவு அது. தொடர்ந்து ஒரு சாதாரண வீரராக இருந்து கொண்டு கோலிக்கும் வழிகாட்டிக் கொண்டு 2019 உலகக்கோப்பையோடு ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவித்தார். அந்த Power Transition ஐ தோனி அவ்வளவு இலகுவாக செய்து காட்டியிருந்தார்.
இந்த Power Transition இல் குழம்பும் அணிகள் சறுக்கலுக்கு மேல் சறுக்கலை சந்திப்பதை தொடர்ந்து பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். ஒரு காலத்தில் ஜாம்பவானாக இருந்து இப்போது கத்துக்குட்டியாக மாறியிருக்கும் இலங்கை அணிக்கு கடந்த நான்கைந்து ஆண்டுகளில் எத்தனை வீரர்கள் கேப்டன்களாக இருந்திருக்கின்றனர் என எண்ணிப்பாருங்கள். வார்னரை வாட்டர் பாட்டில் தூக்க வைத்த சன்ரைசர்ஸ் கடந்த சீசனில் என்ன பாடு பட்டதென்பதை சொல்லி தெரிய வேண்டுமா? திடீரென தினேஷ் கார்த்திக்கை உட்கார வைத்துவிட்டு இயான் மோர்கனை கொல்கத்தா கேப்டன் ஆக்கியதே? அந்த சீசனில் கொல்கத்தா அதன்பிறகு என்ன சாதித்தது? ஏன், சமீபத்தில் பிசிசிஐக்கும் விராட் கோலிக்கும் இடையே நடந்த பிற்றல் பிடுங்கல்கள் எல்லாம் இந்த Power Transition மென்மையாக நடக்காததன் விளைவன்றி வேறென்ன? இவையெல்லாம் 'Art of leaving' இன் முக்கியத்துவத்தை உணர்த்திய சமீபத்திய சம்பவங்கள். ஒரு இடத்தில் நம்முடைய இருப்பு தேவைப்படாதபட்சத்தில் அல்லது நம்முடைய இடத்தில் வேறொருவர் அமரும் சமயம் வந்துவிட்டதென்பதை உணரும்பட்சத்தில் வீண் சர்ச்சைகழுக்கோ பிரச்சனைகளுக்கோ வழிவகுக்காமல் அப்படியே மெதுவாக ஒதுங்கிவிட வேண்டும். இதை தோனி எப்போதுமே நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால் வீரர்கள் ரீட்டெயின் செய்யப்படும்போதே தன்னை விட ஜடேஜாவிற்கு அதிக சம்பளம் கொடுக்கவும் தோனியே முன் வந்து ஒப்புக்கொண்டார். ஜடேஜா அதற்கு தகுதியானவர் என்பதை தோனி அறிந்திருந்தார். அவர் அடைய வேண்டிய இடத்தை அடைய குறுக்கே நிற்க தோனி விரும்பவில்லை. தோனிக்கு 41 வயது நெருங்கிவிட்டது. ஒப்புக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் தோனி தனது கிரிக்கெட் வாழ்வின் அந்தி சாயும் பொழுதில் இருக்கிறார். தோனி இருந்த இடத்தில் வேறு ஒரு ஆள் வந்து நிரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். அது தோனி இன்று ஓய்வு பெற்றவுடன் நாளையே நடந்து விடாது. அதற்கு ஒரு நேரம் எடுக்கும். அந்த நேரத்தை தன்னுடைய அடியை பற்றி நடக்கப்போகிறவர் எந்த அழுத்தமும் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை முன் நின்று தானே வழங்கவேண்டும். அதைத்தான் தோனி செய்து கொண்டிருக்கிறார்.
தலைவன் என்பவன் தலைமை பொறுப்பிலிருந்து ஆளும்போது மட்டுமல்ல அதிலிருந்து விலகும்போதும் ஒரு தலைவனாகவே யோசிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள். தோனியை போல!