KKR WIN : ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா இமாலய வெற்றி : ப்ளே ஆப் வாய்ப்பு மிகப் பிரகாசம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தாவின் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு மிக பிரகாசமாகி உள்ளது.
ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணி ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லும், வெங்கடசும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர்.
வெங்கடேஷ் 38 ரன்கள் எடுத்திருந்த ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா அதிரடியாக ஆடினர். ஆனால், 5 பந்தில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதியும், சுப்மன் கில்லும் அதிரடியாக ஆடியதால், கொல்கத்தா 12.1 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது.
சுப்மன்கில் அதிரடியாக ஆடி 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். 16 ஓவர்களில் 136 ரன்களை எடுத்திருந்த நிலையில் கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அதிரடியாக ஆடியது. கடைசியில் 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 171 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டோம் என்ற மனநிலையில் மிகவும் மோசமாக ஆடியது. கொல்கத்தா வீசிய முதல் ஓவரிலே ஜெய்ஷ்வால் ஷகிப் அல் ஹசன் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவர் அவுட்டான சிறிது நேரத்தில் தொடக்க வீரர் லிவிங்ஸ்டன் 6 ரன்னில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத் பெர்குசன் முதல் பந்திலே எல்.பி.டபுள்யு ஆகி வெளியேறினார். 4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஷிவம்துபேவும், கிளன் பிலிப்சும் அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என்று எதிர்பார்த்த ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராஜஸ்தான் அணி 33 ரன்கள் எடுத்திருந்த போது கிளன் பிலிப்ஸ் 8 ரன்களிலும், 34 ரன்கள் எடுத்திருந்த போது ஷிவம் துபே 18 ரன்னிலும், 35 ரன்னில் கிறிஸ் மோரிசும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 9 ஓவர்களிலே ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ராஜஸ்தான் அணி 50 ரன்களையாவது கடந்து விடுமா என்ற பரிதாப நிலை ஏற்பட்டது. அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராகுல் திவேதியா மட்டும் அதிரடியாக ஆடினார். ஆனாலும், அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுமுனையில் வீரர்கள் யாரும் இல்லை. ராஜஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ராகுல் திவேதியா மட்டும் அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
வெற்றி சாத்தியமில்லை என்றாலும் ராகுல் திவேதியா மட்டும் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 9 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ராஜஸ்தான் 15 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்தது. சுனில் நரைன் வீசிய 16வது ஓவரில் 9வது விக்கெட்டாக சேத்தன் சக்காரியா வெளியேறினார். கடைசியில் 10வது விக்கெட்டாக ஷிவம் மாவி பந்தில் ராகுல் திவேதியா ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணிக்காக 36 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 44 ரன்களை எடுத்தார். இதனால், ராஜஸ்தான் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி சார்பில் ஷிவம் மாவி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 தோல்வி, 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் நல்ல ரன்ரேட்டில் நான்காவது இடத்தை தக்கவைத்துள்ளது.