(Source: ECI/ABP News/ABP Majha)
DC vs CSK, 1 Innings Highlight: அம்பத்தி ராயுடு போராடி அரைசதம் : டெல்லிக்கு 137 ரன்கள் இலக்கு..
IPL 2021, DC vs CSK: டெல்லி அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அம்பத்தி ராயுடுத அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார்
துபாய் மைதானத்தில் இன்று நடைபெறும் 50வது போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க சென்னை அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. நோர்ட்ஜே வீசிய முதல் ஓவரிலே சென்னையின் நட்சத்திர வீரர் ருதுராஜ் ரிவியூ மூலம் மீண்டும் பேட் செய்ய வாய்ப்பு பெற்றார். டுப்ளிசிஸ்- ருதுராஜ் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்து 2 ஓவரிலே 26 ரன்களை சேர்த்தனர்.
இதனால், டெல்லி அணிக்காக மூன்றாவது ஓவரை அக்ஷர் படேல் வீசினார். ரிஷப் பந்தின் முயற்சியின் பலனாக அக்ஷர் படேல் சுழலில் சிக்கிய பாப் டுப்ளிசிஸ் 10 ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த போட்டியில் சதமடித்த ருதுராஜ், நோர்ட்ஜே வீசிய பவுன்சரில் 13 ரன்னில் வெளியேறினார்.
அவர் அவுட்டான சிறிது நேரத்தில் மொயின் அலியும் அக்ஷர் படேல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரிலே 19 ரன்னில் உத்தப்பாவும் அவுட்டானார். 9 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகள் விழுந்ததால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அம்பத்தி ராயுடுவும் – தோனியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக சென்னையின் ஸ்கோரை உயர்த்தினர். சென்னை அணி 17வது ஓவரில்தான் 100 ரன்களையே கடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18வது ஓவரில்தான் தனது முதல் சிக்ஸரை அடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பொறுப்புடன் ஆடிய அம்பத்தி ராயுடு- தோனி ஜோடி பார்ட்னர்ஷிப்பை அரைசதத்தை கடந்தனர். கடைசி ஓவரில் அதிரடியை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி ஆவேஷ்கான் வீசிய முதல் பந்திலே 18 ரன்னில் அவுட்டானார். ஆனால், ஆவேஷ்கான் சிறப்பாக வீசியதால் கடைசி ஓவரில் ஒரு விக்கெட், ஒரு டாட் பந்துடன் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அம்பத்தி ராயுடு மட்டும் தனி ஆளாக போராடி 43 பந்தில் 55 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி அணி சார்பில் அக்ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நோர்ட்ஜே, ஆவேஷ்கான், அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரபாடா, அஸ்வினும் மிகவும் சிக்கனமாக வீசினர். கடந்த போட்டியில் 189 ரன்களை குவித்த சென்னை அணி இந்த போட்டியில் 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.