IPL Qualifier 1: டெல்லிக்கு எதிராக இரு தோல்விகள்: பதிலடி தருமா சென்னை? தோனி வியூகம் பலிக்குமா?
இந்த சீசனில் டெல்லிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்திருப்பதால், குவாலிஃபையரில் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பது நாளை தெரிந்துவிடும்.
2021 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் என நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், நாளை துபாய் மைதானத்தில் சென்னை - டெல்லி அணிகள் குவாலிஃபையர் 1 போட்டியில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில்,14 போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்று 20 புள்ளிகளோடு முதல் இடத்தில் நிறைவு செய்தது. 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளோடு சென்னை அணி இரண்டாம் இடம் பிடித்தது. அதே 18 புள்ளிகளோடு இருக்கும் பெங்களூருவுக்கு, நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால் மூன்றாம் இடம் பிடித்தது. 14 புள்ளிகளோடு கடைசி நேர எண்ட்ரியாக கொல்கத்தா அணி நான்காவது இடத்தில் நிறைவு செய்தது.
கோப்பையை குறிவைக்கும் டெல்லி கேப்பிடல்ஸ்
கடந்த 2018-ம் ஆண்டு முதல் டெல்லி அணியின் பெயர் மாற்றப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடி வந்தது. தற்போது ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடி வருகிறது. 2008 முதல் 2021 வரையிலான ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணி 3 முறை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடியபோது முதல் இடத்தை பிடித்து இருந்தது.
அனுபவம் வாய்ந்த கேப்டன்களை கொண்ட மற்ற அணிகளை விட இளம் கேட்பன்கள் தலைமையில் விளையாடும் டெல்லி அணி கடந்த மூன்று ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையையும் டெல்லி பெற்றுள்ளது. இதற்கு, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியும் ஒரு முக்கிய காரணம். இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி அணி, பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்து அம்சங்களையும் ’டிக்’ செய்து, கோப்பையை குறிவைத்திருக்கிறது. இம்முறை தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
நான்காவது முறையாக சாம்பியனாகும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை, 14 ஐபிஎல் சீசன்களில், 12 முறை விளையாடியுள்ளது. 2016, 2017 ஆண்டுகளில் விளையாடவில்லை. சென்னை அணி விளையாடிய 12 சீசன்களில் 11 சீசன்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2020 சீசனில், சொதப்பிய சிஎஸ்கே, முதல் முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. இந்த சீசன் முதல் பாதி இந்தியாவிலும், இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
Chennai Super Kings qualified for the playoffs in,
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 30, 2021
2008 ✅
2009 ✅
2010 ✅
2011 ✅
2012 ✅
2013 ✅
2014 ✅
2015 ✅
2018 ✅
2019 ✅
2020 ❌
2021 ✅
Extraordinary. #IPL2021 | #SRHvCSK pic.twitter.com/uTJjejzMwm
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வந்த சிஎஸ்கே, லீக் சுற்றின் கடைசி மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி சொதப்பி உள்ளது. ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் என மூன்று அணிகளோடு சிஎஸ்கே தோல்வியுற்றது. இந்த சீசனில் டெல்லிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்திருப்பதால், குவாலிஃபையரில் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதை பார்ப்போம். ஓப்பனிங், பெளலிங், ஃபீல்டிங் என சிஎஸ்கே வலுவான அணியாக இருந்தாலும், மிடில் ஆர்டர் சொதப்பல்கள் சென்னையின் மைனஸ். எனினும் இந்நேரம் தோனி சில வியூகங்களை வகுத்திருப்பார். அது பலிக்குமா என்பது நாளை தெரியும்.