Impact Player: ஐபிஎல்லில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி… ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தினரா?
இரு அணியினருமே முன்கூட்டியே முடிவு செய்து அணியினரை தேர்வு செய்திருந்தனர். இரண்டாவது பேட்டிங் அடிய குஜராத் அணி கூடுதலாக ஒரு பந்துவீச்சாளருடன் இறங்க, சிஎஸ்கே கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இறக்கியது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2023 சீசன் நேற்று பிரம்மாண்டமான மைதானத்தில் பிரம்மாண்டமான போட்டியோடு துவங்கிய நிலையில், அதிக ரசிகர்களை கொண்ட சிஎஸ்கே அணி நடப்பு சாம்பியன் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த இரு அணிகள் மோதிய 3 வது போட்டியான இதிலும் சென்னை அணி வெற்றிபெறாததால், இதுவரை குஜராத் டைட்டான்ஸ் அணியிடம் வென்றதே இல்லை என்ற மோசமான சாதனை தொடருகிறது. பேட்டிங்கில் ருத்துராஜ் அதகளம் செய்தாலும், பந்து வீச்சில் தாக்கம் இல்லாதது சிஎஸ்கே அணியை தோல்விக்கு இட்டுச்சென்றது.
இம்பேக்ட் பிளேயர் முறை
இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இம்பேக்ட் பிளேயர் முறை பயன்படுத்தப்பட்டது. இந்த விதி என்னவென்றால் ஒவ்வொரு அணியும் ஆடும் லெவன் அணியை அறிவிக்கும்போதே, நான்கு சப்ஸ்டிட்யூட்களை அறிவிக்க வேண்டும், அவர்களில் இருந்து ஒரே ஒருவரை ஒருமுறை மட்டும் வேறு ஒரு வீரருக்கு பதிலாக மாற்றிக்கொள்ளலாம். ஆட்டத்தின் போக்கிற்கு தகுந்தவாறு அணி கேப்டன் இந்த முடிவுகளை எடுப்பதால் இது போட்டியை மேலும் ஸ்வாரஸ்யமாக்குகிறது. முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட நிலையில் இரு அணியினருமே முன்கூட்டியே முடிவு செய்து அணியினரை தேர்வு செய்திருந்தனர். இரண்டாவது பேட்டிங் ஆட முடிவு செய்த குஜராத் அணி கூடுதலாக ஒரு பந்துவீச்சாளருடன் இறங்கியது. சிஎஸ்கே கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இறக்கியிருந்தது.
சொதப்பிய குஜராத்தின் திட்டம்
ஆனால் வில்லியம்சன் பவுண்டரி லைனில் அட்டகாசமாக பறந்தது சிக்ஸருக்கு சென்ற பந்தை பிடித்து கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட, உடனே இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை பயன்படுத்தி, குஜராத் அணி சாய் சுதர்சனை களமிறக்கினர். அதனால் அவர்களது பிளான் கொஞ்சம் சொதப்பினாலும், ஆல் ரவுண்டர்கள் நிறைந்த அணி என்பதால் பிழைத்துக்கொண்டது. வில்லியம்சன்னுக்கு பதிலாக நம்பர் 3 யில் களம் இறங்கிய சாய் சுதர்சன் 17 பந்துகளில் 22 ரன்கள் அடித்து சுமாரான பங்களிப்பையே அளித்தார். ஆனால் இம்பாக்ட் பிளேயர் மூலம் கூடுதல் பேட்ஸ்மேனை பெறும் திட்டம் சொதப்பியது.
நன்றாக பயன்படுத்திய தோனி
ஆனால் போல தோனி, இந்த வாய்ப்பை பிரகாசமாக பயன்படுத்தினார். பேட்டிங்கின்போது அம்பத்தி ராயுடுவை ஆடும் லெவனில் வைத்திருந்த அவர், பவுலிங்கின்போது அவரை வெளியேற்றிவிட்டு, துஷார் தேஷ்பாண்டே-வை இறக்கினார். அவரது பந்துவீச்சில் தான் முக்கியமான திருப்புமுனையை சிஸ்கே அணி பெற்றது. அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சுப்மன் கில்லை வீழ்த்தினார், ஆனாலும் அவரது ஓவரில் ரன்கள் நிறைய கசிந்தது பெரும் பின்னடைவாக இருந்தது. போட்டி முடிவில் தோனி பவுலிங்கின்போது இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உதவிகரமாக இருப்பார் என்று கூறினார்.