GT Vs RCB, IPL 2024: ஐபிஎல் பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கப்போவது யார்? பெங்களூர் - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை
GT Vs RCB, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.
GT Vs RCB, IPL 2024: குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி உள்ளது. மீதமுள்ள 9 அணிகளும் 4 இடங்களுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோத உள்ளன.
குஜராத் - பெங்களூர் மோதல்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. குஜராத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இன்றைய போட்டியில் வென்று பழிதீர்ப்பதோடு, பிளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை தக்க வைக்கவும் குஜராத் அணி தீவிரம் காட்டுகிறது. பெங்களூர் அணியோ 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம், பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம். எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பெங்களூர் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த பெங்களூர் அணி, கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டதை போன்றே, செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணியால் வாகை சூட முடியும்.
குஜராத் அணியில் பேட்டிங்கில் பெரும் அதிரடி பட்டாளமே உள்ளது. ஆனாலும், கேப்டன் சுப்மன் கில், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சிலும் ரஷித் கானை தவிர மற்ற விரர்கள் யாரும் நடப்பு தொடரில் குஜராத் அணியில் பெரிதாக சோபிக்கவில்லை. மோகித் சர்மா பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளார்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி இரண்டு முறையும், பெங்களூர் அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 200 ரன்களையும், குறைந்தபட்சமாக 168 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூர் அணி அதிகபட்சமாக 206 ரன்களையும், குறைந்தபட்சமாக 170 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
பெங்களூர் மைதானம் எப்படி?
பெங்களூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பது அனைவரும் அறிந்தே. இன்றைய போட்டியிலும் அதில் எந்த மாற்றமும் இருக்காது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். மைதானத்தின் சிறிய பவுண்டரி எல்லைகள், 200 ரன்கள் விளாசப்படுவதை மிகவும் எளிதாக்குகிறது.
உத்தேச அணி விவரங்கள்:
குஜராத்: விருத்திமான் சாஹா , ஷுப்மான் கில், கேன் வில்லியம்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா
பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்