GT Vs KKR, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா குஜராத்? அகமதாபாத்தில் கொல்கத்தா வீழ்த்துமா?
GT Vs KKR, IPL 2024: ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
GT Vs KKR IPL 2024: குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 62 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
குஜராத் - கொல்கத்தா பலப்பரீட்சை:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 9 வெற்றிகளுடன் நடப்பாண்டில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குஜராத் அணியோ 12 போட்டிகளில் ஐந்தில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கான ரேஸில் நீடிக்க முடியும். இதனால் இன்றைய போட்டி குஜராத் அணிக்கு முக்கியமானதாகும். போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த அணி, சென்னை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் ஃபார்ம்க்கு வந்திருப்பது அணிக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. சாய் சுதர்ஷன் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினால் குஜராத் அணியால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற முடியும். மறுமுனையில் ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட கொல்கத்தா அணி, முதல் இரண்டு இடங்களை உறுதி செய்ய தீவிரம் காட்டுகிறது. நரைன், பிலிப் சால்ட், ரகுவன்ஷி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் என அணியின் முன்கள பேட்ஸ்மேன்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடர்ந்து ரன் குவித்தும் வருகின்றனர். பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா அதகளம் செய்து வருகிறார். ஸ்டார்க் மற்றும் நரைன் பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் அந்த அணி ஒரு குழுவாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி 2 முறையும், கொல்கத்தா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 204 ரன்களையும், குறைந்தபட்சமாக 204 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 207 ரன்களையும், குறைந்தபட்சமாக 148 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
அகமதாபாத் மைதானம் எப்படி?
நடப்பு தொடரில் அகமதாபாத்தில் நடந்த போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே, முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும், சேஸிங் செய்யும் அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.
உத்தேச அணி விவரங்கள்:
கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.
குஜராத்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில் , சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர்