"கேகேஆர் அணி செய்த அளவுக்கு என் நாடு கூட எனக்கு செய்யவில்லை" - உணர்ச்சிவசப்பட்ட ஆண்ட்ரே ரஸல்!
"சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த சூழலில், KKR எனக்கு பல உதவிகளை செய்து, என் முழங்கால்களுக்கு முறையான சிகிச்சையைப் பெற என்னை அனுப்பினார்கள். அந்த அணிக்கு நேர்மையாக இருக்க இது ஒரு முக்கிய காரணம்."
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் ஏற்ற இறக்கங்களுடன்தான் இருந்து வருகிறது. அவர்கள் ஏழு ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளனர். அணி அதன் பேட்டிங் செயல்திறனில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. முக்கியமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாதது முதல் கவலையாக இருக்கலாம் என்றாலும், அணியில் வெங்கடேஷ் தவிர எந்த வீரருமே சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக KKR அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவரான ஆண்ட்ரே ரஸல் சுத்தமாக ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாரமாக உள்ளது. 8 போட்டிகளில், ரசல் 18 என்ற மோசமான சராசரியில் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பந்துவீச்சு பங்களிப்பு
ஆனால் பந்துவீச்சில் ஓரளவுக்கு அவ்வபோது பங்களித்து வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் முதன்முறையாக தனது நான்கு ஓவர்களை முழுமையாக வீசினார்ம். 29 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் KKR இன் வெற்றிக்கு ரஸ்ஸலின் ஸ்பெல் முக்கியமானதாக இருந்தது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரிடம் இருந்து பேட் மூலமாகவும் பெரிய பங்களிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ரசலின் முந்தைய பங்களிப்பு
கடந்த பல ஆண்டுகளாக KKR இன் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக இருந்து வரும் இவர், அணிக்கு பல நேரங்களில் நம்பமுடியாத பங்களிப்புகளை அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் கேகேஆர் அணிக்காக ஆடும் அவர், போட்டியில் தனது அதிரடித் தாக்குதலுக்காக தனது பெயர் பெற்றவர்; 2019 தொடரில், ரசல் 204.81 என்ற அதிர்ச்சிகரமான ஸ்டிரைக் ரேட்டில் 510 ரன்கள் எடுத்தார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், ரஸ்ஸல் தனது முழங்கால் சிகிச்சை காரணமாக சிரமப்பட்டு வருகிறார். இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசுகையில், நைட் ரைடர்ஸ் நிர்வாகம் தனது சிகிச்சைக்கு எவ்வாறு உதவியது என்பதை மனம் திறந்து பேசினார்.
கேகேஆர் செயத உதவி
"சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்த சூழலில், KKR எனக்கு பல உதவிகளை செய்து, என் முழங்கால்களுக்கு முறையான சிகிச்சையைப் பெற என்னை அனுப்பினார்கள். அந்த அணிக்கு நேர்மையாக இருக்க இது ஒரு முக்கிய காரணம். வேறு எந்த லீக் போட்டிகள் உரிமையாளரும் அல்லது எனது நாடும் கூட என் மீது இவ்வளவு முதலீடு செய்யவில்லை," என்று ரஸ்ஸல் கூறினார். ஜூன் மாதம் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததால், ரசல் 2019 உலகக் கோப்பையின் பெரும்பகுதியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அப்போதிருந்து, அவர் தனது முழங்காலில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.
இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்
கடந்த ஆண்டு, ரசலுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடனும் கருத்து வேறுபாடு ஏற்பட, பின்னர் அணியின் அப்போதைய தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சர்வதேச அணிக்கு மீண்டும் அவர் கிடைப்பதில் தெளிவு இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஸல் பேசுகையில், "நான் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இப்போது சுமார் 9 ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். இத்தனை வருடங்களாக இங்கு இருந்த நான் இவர்களை சந்திக்கிறேன், ஒவ்வொரு வருடமும் அவர்களுடன் நெருங்கி பழகுவேன். ஐபிஎல் இல்லாத போதுகூட நான் இன்னும் திரு வெங்கியுடன் (மைசூர்) தொடர்பில் இருக்கிறேன். நான் அவரைப் பார்க்கிறேன், நான் அவரை மிகவும் மதிக்கிறேன்," என்று கூறினார்.