சின்னப் பசங்கன்னு நெனச்சீங்களா? - ஐ.பி.எல்-இல் சொல்லி அடித்த கில்லி டெல்லி!
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. அந்த அணி 2 முறை புள்ளிப் பட்டியலில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன. இன்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 10 ஆம் தேதிமுதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. ஏற்கனவே டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
இதில் முதலிடத்தில் இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 4 வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 5 வது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 6 வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ், 7 வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், 8 வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் உள்ளன.
2008 முதல் 2021 வரையிலான ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி அணி 3 முறை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேப்பிடஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடியபோது முதல் இடத்தை பிடித்து உள்ளன. இந்த தொடரின் மூலம் ஐ.பி.எல். லீக் சுற்றுகளின் முடிவில் அதிக முறை முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 வது இடத்தை பிடித்து உள்ளது.
4 முறை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. அந்த அணி இதுவரை 2 முறை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
டெல்லி அணியின் பெயர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடியது. தற்போது ரிஷப் பண்ட் தலைமையில் ஆடி வருகிறது. அனுபவம் வாய்ந்த கேப்டன்களை கொண்ட மற்ற அணிகளை விட இளம் கேட்பன்கள் தலைமையில் விளையாடும் டெல்லி அணி கடந்த 3 ஆண்டுகளாகவே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையையும் டெல்லி பெற்றுள்ளது. இது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி ஒரு முக்கிய காரணம். இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை முத்தமிடாத அந்த அணி, இம்முறை சாதிக்கிறதா என்று பார்ப்போம்.
இதுவரை முதலிடம் பிடித்த அணிகள் (ஆண்டு வாரியாக) :
2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
2009 - டெல்லி கேப்பிடல்ஸ்
2010 - மும்பை இந்தியன்ஸ்
2011 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
2012 - டெல்லி கேப்பிடல்ஸ்
2013 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2014 - பஞ்சாப் கிங்ஸ்
2015 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2016 - குஜராத் லயன்ஸ்
2017 - மும்பை இந்தியன்ஸ்
2018 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2019 - மும்பை இந்தியன்ஸ்
2020 - மும்பை இந்தியன்ஸ்
2021 - டெல்லி கேப்பிடல்ஸ்