CSK Captain: பலித்தது ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு; சி.எஸ்.கேவின் புதிய கேப்டன் தேர்வு- பின்னணியில் நடந்தது என்ன?
CSK Captain: சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என ஏபிபி நாடு சார்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அதிகமாக வாக்களித்தனர்.
2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டு 17வது சீசன் நாளை அதாவது மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக்கில் மிகவும் முக்கியமான அணியாக தொடக்கம் முதல் இப்போது வரை உள்ள அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டதால் தோனிக்காகவே சென்னை அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை அணியை முதல் சீசனிலேயே தோனி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
சிறந்த கேப்டன் தோனி:
தோனியின் சிறப்பான கேப்டன்சியால் சென்னை அணி 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. மேலும் ஐந்து முறை கேப்டனாக கோப்பையை வென்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்தார்.
தோனியிடம் இருந்த கேப்டன்சி தற்போது ருதுராஜ் கெய்க்வாடிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சென்னை அணியின் ரசிகர்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என சென்னை அணி ரசிகர்களே தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் கடைசி சீசன் என கருத்துகள் உலாவி வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ என்னால் காத்திருக்க முடியவில்லை. வரக்கூடிய புதிய சீசனில் புதிய அத்தியாத்தை தொடங்குகின்றேன். காத்திருங்கள்” என பொருள் படும்படி பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு இது தோனியின் கடைசி சீசன் என்ற மனநிலையை ரசிகர்களுக்கு உருவாக்கியது.
இது தொடர்பாக தமிழ் இணைய ஊடகங்களில் முன்னணி ஊடகங்களில் ஒன்றாக உள்ள நமது ஏ.பி.பி சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என சென்னை அணியின் ரசிகர்களாகிய வாசகர்கள் மத்தியில் கேட்கப்பட்டது. அதில், ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் என மூன்று வீரர்களில் யார் சென்னை அணியின் அடுத்த கேப்டன் என கேட்கப்பட்ட கேள்விக்கு ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 59.6 % வாக்களித்தனர். இவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜாவுக்கு 27.7% வாக்களித்தனர். ரஹானேவுக்கு 12.8% வாக்களித்தனர்.
பின்னணியில் நடந்தது என்ன?
ஏபிபியின் கருத்துக் கணிப்பில் வந்த முடிவுகளைப் போலவே சென்னை அணி நிர்வாகம் தோனியிடம் இருந்த கேப்டன்சியை ருத்ராஜிடம் வழங்கியுள்ளது. ருத்ராஜிடம் கேப்டன்சியை வழங்குவதற்கு முன்னர் சென்னை அணி நிர்வாகத்தில் பலகட்ட ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. குறிப்பாக அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வு செய்வதில் தோனியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு சீசனில் லீக் போட்டிகளுக்கு மத்தியில் கேப்டன்சி தோனியிடம் இருந்து ஜடேஜாவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஜடேஜா சொதப்பவே அந்த சீசனிலேயே தோனியின் வசம் கேப்டன்சி மீண்டும் கொடுக்கப்பட்டது.
இதையெல்லாம் யோசித்துவிட்டுதான் தோனி தனது ஆதரவை ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ருத்ராஜ் கெய்க்வாட்டை டிக் அடிக்க தோனியிடம் இருந்த காரணங்களில் மிகவும் முக்கியமானதாக இருந்தது, ருதுராஜால் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்த முடியும் என்பது என கூறப்படுகின்றது. இதனால்தான் சென்னை அணியின் கேப்டனாக ருத்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.