கோலாகலமாக தொடங்கவுள்ள ஐபிஎல் ஏலம்: சென்னை அணியில் நீக்கப்பட்ட 4 பேர்.. ஜடேஜாவின் நிலை என்ன?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மின் ஏலத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் மும்பை அணிகள் தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ-யிடம் சமர்பித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது. முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
ஜடேஜா சென்னையில் இருந்து விலகுகிறாரா?
இந்த ஆண்டு சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகள் காரணமாக அதிரடியாக அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் தோனியே கேப்டன் பதவியை ஏற்க, ஜடேஜா காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். சிஎஸ்கே நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார் எனவும் பல தகவல்கள் பரவின. சென்னை அணி தொடர்பான பதிவுகளை இன்ஸ்டாகிராமில் இருந்து ஜடேஜா நீக்கியதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. டெல்லி அணியுடன் அவரை டிரேட் செய்ய சிஎஸ்கே அணி முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனிடயே, மும்பை அணியும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை மற்றும் மும்பை அணிகள் மிகவும் மோசமாக விளையாடியது 2022ம் ஆண்டு தான் எனவும் கருதப்படுகிறது.
ஐபிஎல் மினி ஏலம்
இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை முன்னிட்டு, வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி கொச்சியில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதைமுன்னிட்டு, 10 அணிகளின் நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைக்க உள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை, நவம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்தது. அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள், தாங்கள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ-யிடம் வழங்கி உள்ளது.
ஜடேஜாவை தக்க வைத்த சென்னை அணி
அதன்படி, சென்னை அணி கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, நாராயண் ஜகதீஷன் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகிய நான்கு பேரை விடுவித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜடேஜாவை சென்னை அணி தக்கவைத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டிலும் தோனி தலைமையிலான அணியில், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, முகேஷ் சவுத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய 9 பேரை சென்னை அணி தக்கவைத்துள்ளது.
பொல்லார்டை விடுவித்த மும்பை அணி
இதனிடையே, கடந்த 2010ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட்டை அந்த அணி விடுவித்துள்ளது. அதோடு, ஃபேபியன் ஆலன், தைமல் மில்ஸ், மயங்க் மார்கண்டே மற்றும் ஹிருத்திக் ஷௌகின் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில், டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.