Dhoni gets Angry: தோனி-பிராவோ குழப்பம் ஏற்பட்டது ஏன்? தோனி கோபத்திற்கு காரணம் இது தான்!
மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் கேட்ச் பிடிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தினால் பிராவோவிடம் கூல் கேப்டன் தோனி கோபப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். 2021ம் ஆண்டுக்கான தொடர் பாதியிலே நிறுத்தப்பட்ட நிலையில், அதன் எஞ்சிய ஆட்டங்கள் நேற்று துபாயில் மீண்டும் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய சவுரப் திவாரி மட்டும் மும்பையின் வெற்றிக்காக தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார்.
— Maqbool (@im_maqbool) September 20, 2021
மும்பை 17.3வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணியின் வெற்றிக்கு அப்போது 15 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சாஹர் வீசிய 18வது ஓவரின் 4வது பந்தை சவுரப் திவாரி விலகிச்சென்று பவுண்டரிக்கு தட்டிவிட முயற்சி செய்தார். ஆனால், பேட்டில் பட்ட பந்து மேலேறி சென்றது. அப்போது, அதை விக்கெட் கீப்பரும் சென்னை அணியின் கேப்டனுமான தோனி கேட்ச் செய்ய ஓடிவந்தார்.
மறுமுனையில் சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர வீரருமான பிராவோவும் ஓடிவந்தார். தோனி தான் வருவதாக கத்திக்கொண்டே ஓடிவந்தார். ஆனாலும், பிராவோவும் கேட்ச் பிடிக்க ஓடிவந்தார். இந்த குழப்பத்தினாலும், பிராவோ அருகே வந்ததாலும் தோனியால் அந்த கேட்ச்சை பிடிக்க இயலவில்லை. இதனால், கேப்டன் கூல் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் தோனியே ஒரு நிமிடம் கோபம் அடைந்தார்.
தோனி கோபத்தில் பிராவோவைப் பார்த்து ஏதோ கூறினார். பின்னர், ஓடிச்சென்று பந்தை பீல்டரிடம் எறிந்த பிறகும் தோனி பிராவோவிடம் ஏதோ சற்று அமைதியாக ஏதோ கூறிவிட்டுச் சென்று கீப்பிங் செய்யச் சென்றார். அப்போது, சவுரப் திவாரி 34 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் இந்த போட்டியில் மும்பை தோல்வியடைந்தாலும் சவுரப் திவாரி 50 ரன்களை அடித்தார்.
பொல்லார்ட் போன்ற வலுவான வீரர்கள் யாரேனும் சவ்ரப் திவாரியுடன் களத்தில் இருந்தால் மும்பையின் வெற்றிக்கு வாய்ப்புகள் அமைந்திருக்கும். ஆனால், யாரும் இல்லாத காரணத்தால் மும்பையால் 136 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. பிராவோவிடம் தோனி கோபப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.