CSK in IPL: நடப்பு சாம்பியனை வீழ்த்தி டேபிள் டாப்க்கு முன்னேறிய சென்னை!
முதல் இன்னிங்ஸில், சென்னை அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது. மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 136 ரன்கள் எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.
2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் டேபிள் டாப்பராக புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது.
.@ChennaiIPL WIN by 20 runs and have added 2 more points to their tally.#VIVOIPL #CSKvMI pic.twitter.com/qVh9ZfwB2E
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணி முதலில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது.
157 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 17 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்துவீச்சில் எல்டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது நடுவர் அவுட் அளிக்கவில்லை. அந்த சமயத்தில் சிஎஸ்கே கேப்டன் ரிவ்யூ கேட்டு முக்கியமான டி காக் விக்கெட் விழ முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அன்மோல்பிரீத் 16 ரன்களுடன் தீபக் சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆகினார். பின்பு சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடன் ஷர்தல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் சவுரப் திவாரி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் பிராவோவின் பந்துவீச்சில் இஷான் கிஷன் 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு மற்றும் திவாரி ஆகிய இருவரும் மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 13 ஓவர்களில் மும்பை அணி 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் 15 ரன்களில் பொல்லார்டு ஹேசல்வூட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த குரூணால் பாண்ட்யா 4 ரன்களுடம் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 17 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து இருந்தது.
இதன்பின்னர் கடைசி ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சிறப்பாக பந்துவீசிய பிராவோ மில்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் ராகுல் சாஹர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.