Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !
2401 நாட்களுக்கு பிறகு இந்திய மகளிர் அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்று இங்கிலாந்தில் களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர் கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் அதே வரவேற்பு மகளிர் கிரிக்கெட்டிற்கு கிடைப்பது இல்லை. இதற்கு சரியான திட்டமிடல் இல்லாததும், மகளிர் போட்டிகளை சரியாக வணிக படுத்தாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பிசிசிஐ கடந்த மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பை பலரும் கேள்வி எழுப்பினர். இந்திய அணி கடைசியாக 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1970 முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆனால் கிட்டதட்ட 50 ஆண்டுகள் முடிந்தும் இந்திய மகளிர் அணி தற்போது வரை 36 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது. இதற்கு காரணம் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே இருக்கும் நீண்ட இடைவெளி தான். நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குவது இந்திய மகளிர் அணிக்கு இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு 2014ஆம் ஆண்டில் தான் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியது. அதாவது சுமார் 2903 நாட்களுக்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. 2006 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு 2021ஆம் ஆண்டு வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 14 ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே களமிறங்கியுள்ளது.
இந்தச் சூழலில் தற்போது 2401 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்தில் இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி களமிறங்க உள்ளது. இதற்காக இந்திய மகளிர் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஆடவர் கிரிக்கெட் அணியின் வீரர் ரஹானே இடமும் பேட்டிங் தொடர்பான ஆலோசனையை மகளிர் அணியின் வீராங்கனைகள் பெற்றுள்ளனர். இந்திய மகளிர் அணியில் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் என்றால் அது மித்தாலி ராஜ் மற்றும் ஜூலன் கோசாமி தான். இவர்கள் இருவரும் 2002ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக களமிறங்கி வருகின்றனர். இந்த இருவரும் தற்போது வரை 10 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளனர். இவர்களின் அனுபவத்துடன் மற்ற வீராங்கனைகளும் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்து மிகவும் சிறப்பாகவே அமைந்துள்ளது. அங்கு இதுவரை 8 போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்திய அணி 2 வெற்றி மற்றும் 6 டிரா செய்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட தோற்காத அணி என்ற சாதனையையும் வைத்துள்ளது. மேலும் இன்று தொடங்கும் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் பட்சத்தில் மகளிர் அணி மற்றொரு புதிய உலக சாதனையை படைக்க உள்ளது. அதாவது தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மகளிர் அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைக்கும்.
தற்போது வரை இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 முறை தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. அந்த சாதனையை தற்போது இந்திய மகளிர் அணி சமன் செய்துள்ளது. இந்தச் சூழலில் இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கும். எனவே இந்தப் போட்டி மகளிர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Sachin on WTC: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தைக் காண ஆர்வமாக உள்ளேன் : உற்சாகத்தில் சச்சின்..!