Paris Olympic 2024: ஒலிம்பிக் தொடர் ஓட்ட பந்தயத்திற்கு இந்திய அணிகள் தகுதி - அசத்திய தமிழக வீரர், வீராங்கனைகள்
Paris Olympic 2024: உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்திற்கு தேர்வான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில், தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.
Paris Olympic 2024: உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், இரண்டாவது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றன.
ஒலிம்பிக்கிற்கு இந்திய அணி தேர்வு:
பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், ரூபால் சௌத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகிய நால்வர் அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.35 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. ஜமைக்காவை சேர்ந்த அணி 3:28.54 பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து, முஹம்மது அனஸ் யாஹியா, முஹம்மது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி, 3 நிமிடம் மற்றும் 3.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. அமெரிக்கா பந்தய தூரத்தை 2:59.95 கடந்து முதலிடம் பிடித்தது.
See you in @Paris2024
— Athletics Federation of India (@afiindia) May 6, 2024
The women and men's 4x400m relay go to Paris.#WorldRelays #PUMA #ParisOlympics pic.twitter.com/SpCvDn3Vbe
தமிழர்கள் அசத்தல்:
இந்த இரண்டு அணிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணியில் உள்ள ஆரோக்கிய ராஜ் மற்றும் மகளிர் அணியில் உள்ள சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழர்கள் ஆவர். ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு, உலக தடகள போட்டியில் இரண்டாவது சுற்றில் மூன்று ஹீட்களிலும் தலா முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெற்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்க உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவைச் சேர்ந்த 19 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். அதில், நடப்பு சாம்பியனான ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் அடங்குவர்.