Shubman Gill: சதங்களால் ரன்களை குவித்த சுப்மன் கில்..! சிறந்த வீரராக தேர்வு செய்து கவுரவித்த ஐ.சி.சி..!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில்லை தேர்வு செய்து, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கவுரவித்துள்ளது.
சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு:
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில்லை தேர்வு செய்து, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கவுரவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் நியூசிலாந்தின் கான்வே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. அவர்களில் அதிக வாக்குகளை பெற்று, சுப்மன் கில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
We have a winner! 🏅
— ICC (@ICC) February 13, 2023
Our first ICC Men’s Player of the Month of 2023 has been named 👇
2022ல் அசத்திய சுப்மன் கில்:
2022ம் ஆண்டு என்பது சுப்மன் கில்லுக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவரது எதிர்காலத்தை மாற்றியமைத்த ஒரு ஆண்டாக கருத முடிகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பான ஃபார்மில் இருந்த அவர், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்தார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
சதங்களை விளாசிய சுப்மன் கில்:
அதைதொடர்ந்து நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில், சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனால், 3 போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில் 207 ரன்களை சேர்த்தார். இதில் முறையே முதல் மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் 70 மற்றும் 116 ரன்கள் அடங்கும். ஹைதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், 149 பந்துகளில் 208 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அடுத்த இரண்டு போட்டிகளில் முறையே 40 மற்றும் 112 ரன்களை சேர்த்தார். அவரது அபார ஆட்டத்தால் இந்திய அணி அந்த தொடரை, 3-0 என கைப்பற்றியது.
டி-20 போட்டியிலும் அசத்தல்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், கில் வெறும் 63 பந்துகளில் 126* ரன்களை விளாசினார். இதன் மூலம், டெண்டுல்கர், ரோஹித், சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் மூன்று சர்வதேச வடிவங்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். இந்நிலையில், தான் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்து, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கவுரவித்துள்ளது.