INS vs ENG Day 4 Highlights : களத்தில் நங்கூரமாக நிற்கும் ரூட் - இங்கிலாந்து நிதான ஆட்டம்
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சற்றுமுன் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரூட் 81 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட்ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரின் பேட்டிங்கால் இந்திய அணி 278 ரன்களை குவித்தது.
மூன்றாம் நாளில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. பிறகு, மூன்றாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியது முதல் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. 15.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி 37 ரன்களை எடுத்திருந்த நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர் ரோரி பர்னஸ் 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த இளம் வீரர் ஜாக் கிராவ்லியும் பும்ராவின் வேகத்தில் 6 ரன்களில் ரிஷப்பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், தொடக்க வீரர் டோமினிக் சிப்ளியும், கேப்டன் ஜோ ரூட்டும் அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினர்.
அணியின் ஸ்கோர் 135 ஆக உயர்ந்தபோது தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 133 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களை சேர்த்தார். அடுத்து ஜோரூட்டுடன் இணைந்து விக்கெட் கீப்பர் ஜானி பார்ஸ்டோ ஆடி வருகிறார்.
சற்றுமுன் நிலவரப்படி, இங்கிலாந்து அணி 55 ஓவர்களில் 171 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 123 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 88 ரன்களை எடுத்து ஆடி வருகிறார். அவருக்கு துணையாக ஆடிவந்த ஜானி பார்ஸ்டோ 30 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 95 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டி நிறைவடைய இன்னும் ஒன்றரை நாட்களே உள்ள நிலையில், இந்திய அணி இங்கிலாந்தின் எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு குறைந்த ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்படும். அல்லது இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி மிகப்பெரிய இலக்காக நிர்ணயித்து இந்தியாவிற்கு பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு அளித்து இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மழை குறுக்கிட்டாலும் ஆட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளதால், இந்த போட்டிக்கும் முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் 2 விக்கெட்டுகளை தற்போது வரை கைப்பற்றியுள்ளார்.