Ind vs Eng 1st Test : டக் அவுட்டாகிய கோலி : சொதப்பிய பேட்டிங் - இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தம்..
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நேற்று அந்த நாட்டில் உள்ள நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட்ப்ரிட்ஜில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் இங்கிலாந்து பந்துவீச்சை மிகவும் நிதானமாக எதிர்கொண்டனர். இங்கிலாந்து அணியினரைப் போல, விக்கெட்டுகளை இழக்காமல் இந்திய அணியினர் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேகரித்தனர்.
உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் பந்துகளில் நிதானமாகவே ரன்களை சேகரித்தனர். 37.3 ஓவர்களின்போது இந்திய அணி தனது முதல்விக்கெட்டாக ரோகித் சர்மாவை இழந்தது. இங்கிலாந்து அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 107 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேகரித்தார்.
கே.எல்.ராகுல் 124 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 48 ரன்களை சேகரித்து களத்தில் உள்ளார். அத்துடன் இரண்டாவது நாள் ஆட்டத்திற்கான உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு கே.எல்.ராகுலுடன் சத்தீஸ்வர புஜாரா களமறிங்கினார். அவர் 16 பந்துகளை சந்தித்து 4 ரன்களை எடுத்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய கேப்டன் ரன்மெஷின் விராட்கோலி களமிறங்கினார். 2019ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டியில் எந்தவொரு சதத்தையும் பதிவு செய்யாத விராட் கோலி இந்த போட்டியில் புதிய உலக சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலே ஜோஸ் பட்லரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துணைகேப்டன் அஜிங்கிய ரஹானே 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
பின்னர் கே.எல்.ராகுலும், ரிஷப்பண்டும் களத்தில் இணைந்தனர். அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தபோது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், மழையின் தாக்கம் நின்றபிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆணடர்சன் மீண்டும் தனது பந்துவீச்சை தொடங்கி ஒரு பந்து மட்டுமே வீசிய நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த முறை பெய்த மழை கனமழையாக வலுப்பெற்று தொடர்ந்து பெய்தது. இதனால், மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாமல் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருவது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணியினர் நேற்று நடந்த முதல் இன்னிங்சில் தடுமாறினர். அவர்கள் 65.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களை சேர்த்தார். கடைசி வரிசை வீரர்களில் சாம்கரன் மட்டும் 27 ரன்களை சேர்த்தார். இந்திய அணி சார்பில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சமி 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Tokyo Olympics Wrestling: ஒலிம்பிக் மல்யுத்தம் : வெள்ளி வென்றார் ரவிகுமார் தாஹியா..!