Cricketer Rashid Khan: என்ன போர் நடந்தாலும் இவங்க அக்கப்போர் ஓயாது... ரஷித் கானுக்கு உரிமை கொண்டாடும் பாக்-இந்தியா!
“ஆப்கான் கிரிக்கெட் அழிந்து போகட்டும். அந்த நிலையில், ஆப்கான் கிரிக்கெட்டர்கள் பாகிஸ்தானுக்காக விளையாடுவர். அப்போதுதான் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்ற முடியும்” - நெட்டிசன்கள்
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்ததால் அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் ஐபிஎல் டி-20 தொடரில் விளையாடுவார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
அதே போல, ஆகஸ்டு 24-ம் தேதி டோக்கியோவில் தொடங்க இருக்கும் பாரலிம்பிக் தொடருக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு பேர் தேர்ச்சி பெற்றனர். டேக்வாண்டோ விளையாட்டில் பங்கேற்பதற்காக ஜகியாவும், தடகள விளையாட்டில் பங்கேற்பதற்காக ஹொசெயின் ரசவுலி என்ற வீரரும் டோக்கியோ செல்ல வேண்டும். இப்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்ற சூழல் காரணமாக பாராஒலிம்பிக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பங்கேற்கப்போவதில்லை என அந்நாட்டின் பாராஒலிம்பிக் அமைப்பு அறிவித்துள்ளது.
சர்வதேச விளையாட்டு தளத்தில், ஆப்கானிஸ்தானின் நிலை என்னவாகும் என்ற சந்தேகம் அனைவரிடத்தில் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், ரஷீத் கான், முகமது நபி ஆகியோர் வேறு நாட்டுக்காக விளையாட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் இது குறித்து ட்விட்டரில் மோதி வருகின்றனர்.
If cricket gets banned in #Afghanistan. @BCCI should invite @rashidkhan_19 to play for India.#Kabul #KabulHasFallen
— Shambhv Narayan (@GSNarayano) August 15, 2021
If Taliban disban the Afghan Cricket Board we want @rashidkhan_19 & @MohammadNabi007 to play for Pakistan 🇵🇰. @imranahmadkh do what's necessary #Kabul
— umair (@umair12103559) August 15, 2021
தற்போது ’தி ஹண்ட்ரட்’ தொடருக்காக இங்கிலாந்தில் விளையாடி வரும் ரஷித் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஓர் உருக்கமான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி அவர் பதிவிட்ட பதிவில், “அன்பான உலகத் தலைவர்களே, என்னுடைய நாடு பெருங்குழப்பத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள், அதில் குழந்தைகளும் பெண்களும் வீடுகளை இழந்து நிற்கின்றனர். உயிர்த்தியாகம் செய்து வருகின்றனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர்ந்து வருகின்றனர். எங்களுடைய நாட்டை குழப்பத்தில் விட்டுவிடாதீர்கள். ஆப்கானிஸ்தான் நாட்டையும், ஆப்கான் மக்களையும் அழித்து வருவதை நிறுத்துங்கள். எங்களுக்கு அமைதி வேண்டும்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021
Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
We want peace.🙏
தனது சொந்த நாட்டு மக்களுக்காக உதவி கேட்டு பதிவிட்ட ரஷீத் கான், மிகுந்த மன உளைச்சலில் இருப்பது அவரது பதிவின்மூலம் தெரிகிறது. ஆனால், ஆறுதல் சொல்ல வேண்டிய ரசிகர்களோ, நாடு மாறி வந்து விளையாட வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அரங்கேறி வரும் இந்த போர் சூழல் பற்றிய புரிதல் இல்லாமல், கிரிக்கெட்டும் விளையாட்டுமாய் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். உச்சக்கட்டமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் “ஆப்கான் கிரிக்கெட் அழிந்து போகட்டும். அந்த நிலையில், ஆப்கான் கிரிக்கெட்டர்கள் பாகிஸ்தானுக்காக விளையாடுவர். அப்போதுதான் பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்ற முடியும்” என தோழமை நாடு எரிந்து கொண்டிருக்கும்போது ‘நக்கல்’ செய்து கொண்டிருக்கின்றனர்.
இது போன்ற பதற்ற நிலையில், ஆதரவாக இல்லையென்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது!
Afghan Crisis: ஆப்கானின் முதல் வீராங்கணை கடைசி வீராங்கணையான பரிதாபம்! பாராஒலிம்பிக்... பாராத சமூகம்!