Afghan Crisis: ஆப்கானின் முதல் வீராங்கனை கடைசி வீராங்கனையான பரிதாபம்! பாராஒலிம்பிக்... பாராத சமூகம்!
‛‛ஆப்கானிஸ்தான் பெண்கள், தாங்களாகவே இந்த நிலைமைக்கு முன்னேறியுள்ளோம். எங்களது பல ஆண்டுகால முயற்சி முடிவு இல்லாமல் வீணாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’’ -ஜகியா
ஜகியா குடாடதி – மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரலிம்பிக் தொடரில் ஆப்கானிஸ்தானில் இருந்து பங்கேற்க இருக்கும் முதல் வீராங்கனை. பாரலிம்பிக் விளையாட்டுகளில் வரலாறு படைக்க இருந்த ஜகியாவுக்கு, தற்போது ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் அசாதாரண சூழல் அவரது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது!
23 வயதேயான ஜகியா, ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் மாகாணத்தைச் சேர்ந்தவர். ஹெராட்டுக்கும் காபூலுக்கும் 800 கிலோமீட்டர்கள் தூரம். தனது சொந்த மாகாணத்தில் இருந்து நாட்டின் தலைநகருக்கு சென்றடைவதே அவருக்கு போராட்டமாக அமைந்திருந்தது.
ஆகஸ்டு 24-ம் தேதி டோக்கியோவில் தொடங்க இருக்கும் பாரலிம்பிக் தொடருக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு பேர் தேர்ச்சி பெற்றனர். டேக்வாண்டோ விளையாட்டில் பங்கேற்பதற்காக ஜகியாவும், தடகள விளையாட்டில் பங்கேற்பதற்காக ஹொசெயின் ரசவுலி என்ற வீரரும் டோக்கியோ செல்ல வேண்டும். போர் சூழலுக்கு மத்தியிலும், ஆப்கானிஸ்தானில் இருந்து ஜப்பானுக்கு விமானம் ஏறிட வேண்டும் என காபூல் விரைந்த அவருக்கு, முட்டுக்கட்டைகள் காத்திருந்தன.
"This is the first time that a female athlete will be representing Afghanistan at the Games and I’m so happy.”
— Paralympic Games (@Paralympics) August 10, 2021
- Zakia Khudadadi 🇦🇫.#Afghanistan | #Paralympics | #Tokyo2020 | @NpcAfghanistan
இவர்கள் காபூலுக்கு சென்றடையும் முன், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருந்தனர். தற்போது அங்கு நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, பாரலிம்பிக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பங்கேற்கப்போவதில்லை என அந்நாட்டின் பாராலிம்பிக் அமைப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தகவலை உறுதி செய்துள்ள சர்வதேச பாரலிம்பிக் அமைப்பு, ஜகியாவும் ரசவுலியும் பாரலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
பூங்காக்களிலும், தோட்டங்களிலும் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று சர்வதேச விளையாட்டு தளத்தில் தடம் பதிக்க காத்திருந்தவர்களுக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒன்றைகூட விட்டுவைக்கவில்லை இந்த போர்! வாய்ப்பு பறிக்கப்பட்டது, முயற்சி முடக்கப்பட்டது.
தலிபான் பிடியில் சிக்கி கொள்ளாமல் பதுங்கி இருக்கும் அவர், உலக தலைவர்களுக்கும், மக்களும் ஜகியா தனது உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். “நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன், நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் பிரதிநிதியாக பாராலிம்பிக்கில் பங்கேற்க முயற்சி செய்கிறேன். முடிந்தவர்கள் எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் பெண்ணிற்கு மறுக்கப்படும் உரிமைகளை அவ்வளவு எளிதாக கடந்துவிடாதீர்கள். இது முக்கியமான பிரச்சனை. ஆப்கானிஸ்தான் பெண்கள், தாங்களாகவே இந்த நிலைமைக்கு முன்னேறியுள்ளோம். எங்களது பல ஆண்டுகால முயற்சி முடிவு இல்லாமல் வீணாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.” என தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜகியாவுக்கு குரல் கொடுக்க யாரும் முன் வரவில்லை. ஆப்கான் அரசும், ஆப்கானிஸ்தான் விளையாட்டு வாரியமும் செய்வது அறியாது கையை விரித்துள்ளது. உயிரை பணயம் வைத்து காபூல் விமான நிலையத்தில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி பிழைத்து ஓடி கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இடையில், ஜகியாவின் போராட்டம் கண்டுக்கொள்ளப்படாமலையே கடந்து செல்லப்படுகின்றது. உதவியை நாடும் ஜகியாவுக்கு, சிறு துளி நம்பிக்கையை ஊட்ட உலக நாடுகளும், மக்களும் குரல் கொடுத்தாலே போது, அடுத்த முறை அவள் மீண்டு வருவது உறுதி!
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் பாரலிம்பிக் தொடரில் பங்கேற்க, உலகெங்கிலும் இருந்து வீரர் வீராங்கனைகள் டோக்கியோ விரைந்து வருகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 54 இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் தேசிய கொடியை தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஏந்தி செல்ல உள்ளார். இந்த முறை இந்திய வீரர் வீராங்கனைகளில் 9 போட்டிகளில் பங்கேற்கின்றனர். பாராலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்திய 2 தங்கம், 1 வெள்ளி,1 வெண்கலம் வென்றுள்ளது. ஒரே பாராலிம்பிக் தொடரில் இரண்டு தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.