வெற்றியை தீர்மானிக்கும் 5-வது நாள் ஆட்டம் நடக்காதது வேதனை அளிக்கிறது - விராட் கோலி, ஜோ ரூட்..!
வெற்றியை தீர்மானிக்கும் 5-வது நாள் ஆட்டம் நடைபெறாமல் போனது மிகவும் வேதனை அளிப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலியும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியா-இங்கிலாந்து இடையே நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான 5வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. போட்டி நடைபெற்றிருந்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றிருக்கும் என்ற நிலையில், மழை பெய்த காரணத்தால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. முதல் இன்னிங்சில் 64 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்களையும் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டி டிராவில் முடிந்தது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது, “ நாங்கள் ஆட்டத்தின் மூன்றாவது அல்லது நான்காவது நாளில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மழை ஐந்தாவது நாளை தேர்வு செய்துவிட்டது. ஆட்டம் நடந்திருந்தால் பார்ப்பதற்கும், விளையாடுவதற்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நடக்காதது வேதனை அளிக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக செய்தோம். தொடக்கம் வலுவாக அமைந்தது. 5-வது நாளில் எங்களுக்கான வாய்ப்புகளை அறிந்திருந்தோம். ஆட்டத்தில் நாங்கள் ஓங்கியிருந்ததாகவே உணர்ந்தோம்.

அந்த முன்னிலையை பெறுவது முக்கியமானது. ஆனால், 5-வது நாளை முடிக்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. ஆட்டத்தினை தக்கவைப்பதற்காக நாங்கள் ஆட விரும்பவில்லை. இலக்கை நோக்கி ஆடவே விரும்பினோம். நாங்கள் 40 ரன்கள் முன்னிலை பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால், 95 ரன்கள் முன்னிலை பெற்றோம். இந்த அணிதான் எங்களது முன்மாதிரி” என்றார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறும்போது, விறுவிறுப்பான இறுதிநாள் ஆட்டத்திற்கு வானிலை இடையூறு செய்துவிட்டது. சிறந்த டெஸ்ட் ஆட்டத்தை ஆடியுள்ளோம். இதே ஆட்டத்தை தொடரின் அடுத்து வரும் ஆட்டங்களிலும் கொண்டு செல்வோம் என்று நம்புகிறேன். நாங்கள் வெல்ல முடியும் என்று நிச்சயம் நம்பினோம். கேட்ச்கள் மற்றும் பீல்டிங் சரியாக அமைந்தால் எங்களுக்கு வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆட்டத்தை முடிக்காமல் போனது வேதனை அளிக்கிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. எங்களது தொடக்க பேட்டிங் வரிசையிலும், கேட்ச்களை பிடிப்பதிலும் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. இந்திய அணியில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் சிறப்பாக பந்துவீசியதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இந்த போட்டியையும் சேர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியையும் சேர்ந்து 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
இந்த போட்டி முழுவதும் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணியிலும் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணியில் பும்ரா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் என்று மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சமி 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.




















