Ind vs Eng 4th Test: 99 ரன் லீடிங்கில் முதல் இன்னிங்ஸை முடித்த இங்கிலாந்து; எப்படி இருக்கும் இந்தியாவின் 2வது இன்னிங்ஸ்?
இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் விளாசிய கிறிஸ் வோக்ஸ், 50 ரன்கள் எடுத்து கடைசியாக ரன் அவுட்டானார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலை பெற்று முதல் இன்னிங்ஸை முடித்துள்ளது.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப்
இரண்டாவது நாளான் இன்று, ஆரம்பத்திலேயே உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை தந்தார். மாலன் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார். ஆனால், அடுத்து களமிறங்கிய போப், பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்துக்கு ரன் சேர்த்தனர். 62-5 என தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு, போப் மற்றும் பேர்ஸ்டோ பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு ரன் குவித்தனர். இன்றைய போட்டியில் களத்தில் இருந்த பேர்ஸ்டோ, சர்வதேச கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்துள்ளார்.
37 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சிராஜ் பந்துவீச்சில் பேர்ஸ்டோ அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி, போப்போடு ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். இந்த இணை 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சில் மொயீன் அலி கேட்ச் கொடுத்து அவுட்டானார். மொயீன் அலி பெவிலியன் திரும்பியதை அடுத்து, கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் களமிறங்கினார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் விளாசிய அவர், 50 ரன்கள் எடுத்து கடைசியாக ரன் அவுட்டானார். முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி பந்துவீச்சு
உமேஷ் யாதவ் - 3 விக்கெட்டுகள்; பும்ரா - 2 விக்கெட்டுகள்; தாகூர் - 1 விக்கெட்; சிராஜ் - 1 விக்கெட்; ஜடேஜா - 2 விக்கெட்டுகள்
Big wicket for India!
— ICC (@ICC) September 3, 2021
Shardul Thakur claims the prized scalp of Ollie Pope, who falls for a solid 81.#WTC23 | #ENGvIND | https://t.co/zRhnFj1Srx pic.twitter.com/kHSykTCJLM
முதல் நாள் ரீவைண்டு
நேற்று, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி, ஷர்துல் தாகூரின் அரை சதங்களால் இந்திய அணி 191 ரன்களை எட்டியது.