Hockey Women’s Junior World Cup 2023: கடந்தமுறை 4-வது இடம்; இந்தமுறை? இன்று கனடாவை எதிர்கொள்ளும் இந்தியா!
குரூப் சியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி - கனடா, பெல்ஜியம் மற்றும் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியுடன் போட்டியிடுகிறது.
10வது FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 போட்டி சிலியில் இன்று தொடங்குகிறது. மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியானது 12 நாட்களாக நடைபெற்று வருகின்ற டிசம்பர் 10ம் தேதி நிறைவடைகிறது.
4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிகளிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் தங்கள் பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெறும்.
அதன்படி, குரூப் சியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி - கனடா, பெல்ஜியம் மற்றும் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியுடன் போட்டியிடுகிறது. இந்தியா தனது ஹாக்கி உலகக் கோப்பை முதல் போட்டியில் இன்று கனடாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து, நாளைய தினம் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியையும், வருகின்ற சனிக்கிழமை பெல்ஜியத்தையும் எதிர்கொள்கிறது.
இந்தியா இன்று கனடாவை எதிர்கொள்ளும் நிலையில், வரலாற்றை எடுத்து பார்த்தால் இந்திய அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு முன் கனடா அணியை இந்திய அணி மூன்றுமுறை சந்தித்துள்ளது. இந்த மூன்று முறையும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. அதனால், இன்றைய போட்டியிலும் கனடா அணியை இந்திய அணி வீழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியானது இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது, இதை டிவியில் Sports18 TV சேனலிலும், ஓடிடி தளமான ஜியோ சினிமாவில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
நான்கு பட்டங்கள் வென்ற அணி என்ற பெருமையுடன் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியா அணியுடன் குரூப் ஏ பிரிவில் உள்ளது. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா 'பி' பிரிவிலும், 'டி' பிரிவில் இங்கிலாந்து, ஜப்பான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 பிரிவுகள்:
- குரூப் ஏ : ஆஸ்திரேலியா, சிலி, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா
- குரூப் பி : அர்ஜென்டினா, தென் கொரியா, ஸ்பெயின், ஜிம்பாப்வே
- குரூப் சி : பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, இந்தியா
- குரூப் டி : இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா
டோக்கியோ ஒலிம்பிக் வீராங்கனை சலிமா டெட்டே தலைமையில் கடந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்த இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த டிஃபெண்டர் பிரீத்தி இந்தாண்டு இந்திய அணியை வழிநடத்துவார் .ஜூன் மாதம் இந்தியாவின் முதல் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்த அன்னுவும் அணியில் உள்ளார்.
காலிறுதிப் போட்டிகள் டிசம்பர் 6ஆம் தேதியும், அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 8ஆம் தேதியும், இறுதிப் போட்டி டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறும்.
FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023: இந்திய அணி
கோல்கீப்பர்கள் : குஷ்பு, மாதுரி கிண்டோ
டிஃபெண்டர்கள் : நீலம், ப்ரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி
மிட்பீல்டர்கள் : மஹிமா டெடே, மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, சுஜாதா குஜூர், ருதுஜா தாதாசோ பிசல் (துணை கேப்டன்)
முன்கள வீராங்கனைகள் : சாக்ஷி ராணா, மும்தாஜ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா டோப்போ, சுனெலிதா டோப்போ
காத்திருப்பு வீராங்கனைகள் : தூணோஜம் நிருபமா தேவி, ஜோதி எதுலா