முன்னாள் நியூஸி. ஆல்ரவுண்டர் கெய்ன்ஸ் உடல்நிலை கவலைக்கிடம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ். இவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ். இவர் 1989ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட்டில் அறிமுக வீரராக களமிறங்கினார். அதன்பின்னர் 1991ஆம் ஆண்டு நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். 2006ஆம் ஆண்டு வரை இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்தார். 2008ஆம் ஆண்டு ஐசிஎல் என்ற கிரிக்கெட் லீக் டி20 தொடரில் இவர் பங்கேற்றார். அந்த சமயத்தில் இவர் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரில் தன் மீது எந்தவித தவறும் இல்லை என்று நிரூபிக்க நீண்ட நாட்கள் சட்ட போராட்டத்தை மேற்கொண்டார். 2012ஆம் ஆண்டு இந்த சட்டப்போராட்டத்தில் அவர் வெற்றியும் கண்டார்.
அதைத் தொடர்ந்து கெய்ன்ஸ் மீது மெக்கலம், வின்சென்ட் ஆகிய நியூசிலாந்து வீரர்கள் மீண்டும் அவர் மீது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டை வைத்தனர். அந்தக் குற்றச்சாட்டிற்கு அவர் மீது விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் பொய் கூறியதாக இவர் மீது மற்றொரு குற்றமும் சாட்டப்பட்டது. அப்போது முதல் இவர் நியூசிலாந்து கிரிக்கெட்டில் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார். அத்துடன் தன்னுடைய சட்டப் போராட்டத்திற்கான செலவுகளை பார்த்து கொள்ள லாரி ஓட்டுவது மற்றும் டிரக் துடைப்பது உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவருக்கு இதயத்திலிருந்து செல்லும் ரத்த குழாயில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. எனினும் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் இன்னும் சுயநினைவிற்கு திரும்பவில்லை. அத்துடன் தற்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடைய உடல்நிலையில் எந்தவித முன்னேற்றுமும் இல்லை.
Distressing news from Australia.
— Andrew Gourdie (@AndrewGourdie) August 10, 2021
Former @blackcaps all rounder Chris Cairns has suffered a major medical emergency - an aortic dissection - in Canberra.
He is gravely ill.
I understand he is on full life support, and is set to be transferred to a specialist hospital in Sydney.
ஆகவே அவரை தற்போது கான்பரா மருத்துவமனையில் இருந்து சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் அவருடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 51 வயதாகும் கிறிஸ் கெய்ன்ஸ் உடல்நல குறைவு செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இந்திய பேட்ஸ்மேன்களும் லார்ட்ஸ் மைதானமும் - சோகமான தொடர்கதை !