திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூரில் அரசுப்பள்ளி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் பலியான விவகாரத்தில், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் யோகித் என்ற மாணவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பாவி மாணவரின் உயிர் பலி
சம்பந்தப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் எந்த அக்கறையும் காட்டாததன் விளைவுதான் ஓர் அப்பாவி மாணவரின் உயிர் அநியாயமான பறிபோனதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவன் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
யாராக இருந்தாலும் நடவடிக்கை
2014- 2015 ஆம் ஆண்டு நபார்டு நிதியில் அந்த பள்ளிகள் கட்டப்பட்டன. சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கட்டுமான பொருட்கள் இருந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்கள். அது பாதுகாப்பான இடம் என நினைத்து மாணவர்கள் அங்கு சென்று அமர்ந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.






















