FIFA World Cup 2022: "இந்த அணி வரலாறு படைக்க வேண்டும், இல்லையெனில்" - சவுதி அரேபியா பயிற்சியாளர்
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த அணி வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் ரெனார்டு வலியுறுத்தியுள்ளார்.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 லட்சம் பேர் அந்நாட்டில் திரண்டிருக்கின்றனர். கால்பந்து திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
குரூப் பிரிவில் கடைசி ஆட்டத்தில் சவுதி அரேபியா அணி கட்டாயம் வென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அந்த அணி வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் ரெனார்டு வலியுறுத்தியுள்ளார்.
8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும்.
குரூப் சி பிரிவில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணியை 2-1 எனற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா அதிர்ச்சி கொடுத்தது.
பின்னர் போலந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் கூட பதிவு செய்யாமல் தோல்வியைத் தழுவியது.
குரூப் சி பிரிவில் மெக்சிகோ அணியை சவுதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 3 புள்ளிகளுடன் சவுதி அணி குரூப் சி பிரிவில் 3ஆவது இடத்தில் உள்ளது.
View this post on Instagram
வரலாறு படைக்க வேண்டும்: பயிற்சியாளர் ரெனார்டு
இந்நிலையில், சவுதி அரேபிய கால்பந்து பயிற்சியாளர் ரெனார்டு கூறியதாவது:
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
1994-ஆம் ஆண்டில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணி சவுதி அரேபியா. ரசிகர்கள் சவுதி வீரர்களை நினைவில் வைத்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் புதிய வரலாறு படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் 30 ஆண்டுகளில் மறக்கப்பட்டு விடுவார்கள்.
மெக்சிகோவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அனைத்து அணிகளும் வலிமையானவை தான். இருப்பினும், நமக்கு ஜெயிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. மெக்சிகோவுக்கு உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் நிறைய அனுபவம் உள்ளது. எனினும், நாம் களத்தில் மோதி ஜெயித்து தொடரில் நமது இருப்பை தக்க வைக்க வேண்டும் என்றார் ரெனால்டு.
மெக்சிகோ அணி குரூப் சி பிரிவில் கடைசி இடத்தில் ஒரு புள்ளியுடன் உள்ளது. மெக்சிகோ அணி சவுதி அரேபியாவை வென்று, அர்ஜென்டினா அணி போலந்து அணியிடம் தோல்வியுற்றால் மெக்சிகோவுக்கும் அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

