EngW vs IndW Test: கேப்டன் நைட் அரைசதம்: வலுவான நிலையில் இங்கி., மகளிர் அணி !
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்துள்ளது. சோஃபியா 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்தின் பிரிஸ்டோல் கவுண்டி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணியில் 5 வீராங்கனைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீராங்கனைகளாக களமிறங்கினர். குறிப்பாக ஷெஃபாலி வர்மா, தீப்தி சர்மா, தனியா பாட்டியா, சினேஹ் ரானா, பூஜா வஸ்தரக்கர் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக களமிறங்கினர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு எந்தவித பயிற்சிப் போட்டியும் இன்றி களமிறங்கியதால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சற்று தடுமாறினார்கள். அனுபவ வீராங்கனை ஜூலன் கோசாமி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோரின் பந்துவீச்சை இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகள் எளிதாக எதிர்கொள்ள தொடங்கினர். லாரன் ஹில் மற்றும் டாமி பியூமண்ட் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் குவித்தனர். 35 ரன்களுடன் லாரன் ஹில் பூஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
A loud cheer for #TeamIndia's 5⃣ Test debutants! 👏 👏 #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) June 16, 2021
Follow the match 👉 https://t.co/Em31vo4nWB pic.twitter.com/ra0KWggaIz
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் பியூமண்ட் உடன் ஜோடி சேர்ந்து இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இரு வீராங்கனைகளும் அரைசதம் கடந்தனர். பியூமண்ட் 66 ரன்கள் எடுத்திருந்த போது சினேஹ் ரானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நடாலி சிவர் கேப்டன் நைட்டிற்கு பக்க பலமாக இருந்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் 95 ரன்கள் எடுத்திருந்த போது தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். பின்னர் வந்த எமி ஜோன்ஸ் (1)மற்றும் ஜார்ஜியா எல்விஸ் (5)ஆகியோர் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்துள்ளது. சோஃபியா 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் அறிமுக வீராங்கனைகள் சினேஹ் ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும், பூஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். இன்று நடைபெற உள்ள இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்துவீசி மீதமுள்ள 4 விக்கெட்களையும் எடுத்து விரைவாக பேட்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 300 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
மேலும் படிக்க: Indian Women cricket Team: சாதனைப் படைக்குமா இந்திய மகளிர் அணி; 7 ஆண்டுகளுக்கு பின்பு முதல் டெஸ்ட் இன்று !