Mirabai Chanu | "முதல்ல இதை சாப்பிடணும்” : ஆசைப்பட்ட தங்கமகள் மீராபாய்...! லைஃப்டைம் முழுக்க ஃப்ரீ என்று சொன்ன டோமினோஸ்...!
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு வாழ்நாள் முழுவதும் டோமினோஸ் பீட்சா இலவசமாக வழங்கப்படும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்ற 49 கிலோ மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். போட்டி தொடங்கிய இரண்டாவது நாளே இந்தியா வெள்ளிப்பதக்கத்தை வென்றது நாடு முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2000வது ஆண்டில் பளுதூக்குதல் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை மீராபாய்சானு பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு 26 வயதான மீராபாய் சானு கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளை கடந்த சில மாதங்களாக கடைபிடித்தார். வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு, மீராபாய் சானு அளித்த தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முதலில் நான் ஒரு பீட்சா வாங்கப்போகிறேன். நீண்ட காலமாக நான் ஒரு பீட்சா கூட சாப்பிடவில்லை. இந்த நாளுக்காக நான் நீண்ட நாட்கள் காத்திருந்தேன். இதனால், முதலில் ஒரு பீட்சாவை வாங்கப்போகிறேன்.
Aapne kaha, aur humne sunn liya 🙏
— dominos_india (@dominos_india) July 24, 2021
We never want @mirabai_chanu to wait to eat 🍕 again so we’re treating her to FREE Domino’s pizza for life! #PizzasForLife
எனது குடும்பத்தார் போட்டி நடைபெறுவதால் காலையில் இருந்து சாப்பிடவில்லை. அவர்கள் அனைவரும் போட்டி முடியும் வரை, நான் பதக்கம் வெல்லும் வரை தண்ணீர் கூட குடிக்கவில்லை. இப்போது, அவர்களுக்கு மிகப்பெரிய விருந்தே காத்திருக்கிறது.’ இவ்வாறு அவர் கூறினார். அவர் கூறியிருந்ததை டோமினோஸ் பீட்சா நிறுவனத்திற்கு டுவிட்டரில் ஒரு இளைஞர் டேக் செய்திருந்தார். இதையடுத்து, டோமினோஸ் பீட்சா நிறுவனம் அவர்களது டுவிட்டர் பக்கத்தில், மீராபாய் சானு பீசா சாப்பிடுவதற்கு மீண்டும் காத்திருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அதனால், அவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் டோமினோஸ் பீட்சாவை இலவசமாக விருந்தளிக்க உள்ளோம்.” என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த போட்டியில் முதல் இடம் பிடித்து சீன வீராங்கனை ஹாவ் சீஹூ 94 கிலோ மற்றும் 116 கிலோ எடையை தூக்கி மொத்தம் 210 கிலோ எடையுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை மீராபாய் சானு 87 கிலோ மற்றும் 115 கிலோ எடையை தூக்கி மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இந்தோனேசியா வீராங்கனை விண்டிகண்டிகா ஆய்ஷா 84 கிலோ மற்றும் 110 கிலோ எடையை தூக்கி மொத்தம் 194 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தைத வென்றார்.