Yo-Yo Test: இந்தியாவின் ஃபிட் ஆன வீரர் இனி கோலி இல்லையா? 18.7 புள்ளிகள் எடுத்து இனி இவர்தான் முதலிடம்!
கோலி அவரது யோயோ மதிப்பெண் 17.2 என்று இன்ஸ்டகிராம் பதிவில் கூறியது பிசிசிஐ ஒப்பந்த விதிகளை மீறும் செயல் என்று எச்சரிக்கை அவருக்கு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்காக பெங்களூரு அருகே ஆலூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு நடத்தப்பட்ட யோயோ ஃபிட்னஸ் டெஸ்டில் அனைவரும் பாஸ் செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆசியக்கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி
வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ஆலூரில் பயிற்சி முகாம் அமைத்து கடுமையான பயிற்சிகளில் அணி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்த தொடருக்காக தயாராகி வரும் அவர்களுக்கு முக்கியமான உடற்தகுதி சோதனையான யோயோ டெஸ்ட்டிற்கு நேற்று உட்படுத்தப்பட்டனர். இந்த யோயோ டெஸ்டில் 16 புள்ளிகளுக்கு மேல் எடுப்பவர்கள் தான் பாஸ் ஆக முடியும். இந்திய அணி வீரர்கள் அனைவருமே 16.5 க்கு மேல் வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யோ-யோ டெஸ்ட்
யோ-யோ சோதனையானது ஏரோபிக் எண்டூரன்ஸ் ஃபிட்னஸ் டெஸ்ட் என்று கூறப்படுகிறது. கடைசியாக அந்த குறிப்பிட்ட வீரர் விளையாடிய நேரம் மற்றும் கடந்த வாரத்தில் நீங்கள் எவ்வளவு பணிச்சுமையைச் சந்தித்தீர்கள் என்பதைப் பொறுத்து முடிவுகள் மாறுபடும் என்று பிசிசிஐ வட்டாரத்தில் ஒருவர் கூறினார். பெரும்பாலானவை வீரர்கள் 16.5 மற்றும் 18 ரன்களுக்கு இடையே ஸ்கோர் செய்துள்ளனர் என்று பிசிசிஐ இல் இருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தகவல் கிடைத்ததாக பிடிஐ தெரிவித்திருந்தது.
பாகிஸ்தான் போட்டிகள்
இன்னும் யோ-யோ சோதனைக்கு உட்படுத்தப்படாத ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (ஆசியா கோப்பைக்கான ரிசர்வ் வீரர்), மற்றும் கே.எல். ராகுல் போன்ற சில வீரர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் சோதனை செய்யபட்டுவிட்டது. அவர்களில் அனைவரும் பாஸாகி உள்ளனர். ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி மூன்று முறை பாகிஸ்தான் அணியுடன் விளையாட வாய்ப்புகள் உள்ளன. குறைந்தபட்சம் இரண்டு முறையாவது விளையாடும் என்பதால் போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் வீரர்களின் ஃபிட்னஸை அறிய இந்த யோயோ டெஸ்ட் ரிசல்ட்டை பலரும் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர்.
கோலியை மிஞ்சிய கில்
இந்த டெஸ்டில் இந்திய அணி வீரர்களில் அதிக மதிப்பெண் எடுத்த வீரர் ஷுப்மன் கில்தான். அவர் 18.7 மதிப்பெண்களை எடுத்து தனித்து நின்றார். வழக்கமாக இந்திய அணி வீரர்களில் ஃபிட் ஆன வீரர் என்று விராட் கோலியை தான் கூறுவார்கள். யோயோ டெஸ்டிலும் அவரது மதிப்பெண்கள் எல்லோரையும் விட அதிகமாக இருக்கும். ஆனால் இம்முறை இளம் வீரரான ஷுப்மன் கில் அவரைத் தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளார். விராட் கோலி அவரது யோயோ மதிப்பெண் 17.2 என்று இன்ஸ்டகிராம் பதிவில் கூறி இருந்தார். யோயோ மதிப்பெண்ணை வெளியில் கூறியது பிசிசிஐ ஒப்பந்த விதிகளை மீறும் செயல் என்று எச்சரிக்கை அவருக்கு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்திய அணி நிர்வாகம் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் கடுமையான உத்தரவுகளை விரைவாக அறிமுகப்படுத்தியது. அவர்களின் யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்களை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அது ஒரு புறம் இருக்க இனியும் இந்தியாவின் ஃபிட்டான வீரர் என்ற பெயர் கோலிக்கு இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.