MI vs UP: ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை? தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா உபி வாரியர்ஸ்? இன்று மோதல்!
MI vs UP: மகளிர் பிரிமீயர் லீக்கில் இன்று மும்பை - உபி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதிக் கொள்ள உள்ளன.
மகளிர் பிரிமீயர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
ஹாட்ரிக் வெற்றி பெறுமா மும்பை?
மகளிர் ஐ.பி.எல், தொடரை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி பலமான அணியாக உள்ளது. நடப்பு சாம்பியனாக களத்தில் இறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
டெல்லி அணியை கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வீழ்த்திய மும்பை, குஜராத் அணியையும் வீழ்த்தி அசத்தியது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் மும்பை அணி தங்களது ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
உத்தரபிரதேசம் அணி தாங்கள் இதுவரை ஆடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால், கட்டாய வெற்றி என்ற நெருக்கடியில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது. உத்தரபிரதேச அணியுடன் ஒப்பிடும்போது மும்பை அணி பலமாக உள்ளது.
மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், யஸ்திகா பட்டியா, ஹேலி மேத்யூஸ், ப்ரண்ட், அமெலியா கெர் ஆகியோர் பேட்டிங்கில் நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர். குறிப்பாக, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளார். கடந்த 2 போட்டியிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெற்றி நெருக்கடியில் உபி வாரியர்ஸ்?
உத்தரபிரதேச அணியை பொறுத்தவரையில் கேப்டன் ஆலிசா ஹேலி, விரிந்தா, தஹிலா மெக்ராத், கிரேஸ், ஸ்வேதா என பேட்டிங் பட்டாளமே இருந்தாலும் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கின்றனர். தஹிலா, எக்லெஸ்டன், தீப்தி ஷர்மா, கெய்க்வாட், கிரேஸ் ஹாரிஸ் என பலர் பந்துவீச்சாளர்களாக இருந்தாலும் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
இன்றைய போட்டியில் தோற்றால் உத்தரபிரதேச அணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அதேசமயம், தொடர்ந்து வெற்றி நடை போடும் மும்பை அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய விரும்பும். அதேசமயம் ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிக்கணக்கை தொடங்க உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியும் முயலும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் பெங்களூர் அணி 2 போட்டிகளில் ஆடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணியும் 2 போட்டியிலும் வெற்றி பெற்றாலும் ரன்ரேட் பெங்களூரை விட குறைவாக இருப்பதால் மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 3வது இடத்திலும், உபி வாரியர்ஸ் நான்காவது இடத்திலும், குஜராத் அணி 5வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க: Kane Williamson: மூன்றாவது முறையாக குவா குவா சத்தம்.. மீண்டும் தந்தையானார் கேன் வில்லியம்சன்..!
மேலும் படிக்க: Ranji Trophy 2024: 11வது இடத்தில் களமிறங்கி சதம்.. ரஞ்சியில் புதிய சாதனை படைத்த துஷார் தேஷ்பாண்டே!