RCB VS GG: மகளிர் பிரிமியர் லீக்; குஜராத்தை எதிர்கொள்ளும் பெங்களூரு; யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
மகளிர் பிரிமியர் லீக்கின் 5வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இன்று மோதவுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2024 இன் ஐந்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) இன்று அதாவது பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு தொடரில் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளது. இதில் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் உ.பி வாரியர்ஸ் அணிக்கு எதிராக கடைசி பந்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா செயல்படுகின்றார்.
அதேபோல் பெத் மூனி தலைமையில் விளையாடி வரும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் விளையாடி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்க அந்த அணி மிகத் தீவிரமாக பயற்சி மேற்கொண்டு வருகின்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளதால், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தயாராகி வருகின்றது.
இரு அணிகளுக்கும் இடையில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தது என்றால் அது பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷோபி டிவைன். இவர் 36 பந்துகளில் 99 ரன்கள் குவித்ததுதான்.
அதேபோல் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் குஜராத் அணியின் சார்பில் அதிக ஸ்கோர் குவித்த வீராங்கனை என்றால் அது, ஷோபியா டாங்க்லி. இவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 81 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் பெங்களூரு அணி சார்பில் ஷோபி டிவைன் 165 ரன்களை இரண்டு போட்டிகளும் சேர்த்து எடுத்துள்ளார். அதேபோல் இரு அனிகளுக்கும் இடையிலான போட்டியில் ஷோபி டிவைன் 17 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களுக் பறக்கவிட்டுள்ளார்.
பெங்களூரு அணிக்கு பந்து வீச்சில் கடந்த போட்டியில் மிகப்பெரிய பலமாக அமைந்தவர் என்றால், அது ஷோபனா ஆஷா தான். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி, 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியதுதான்.
இரு அணிகளையும் ஒப்பிடுகையில் பெங்களூரு அணியின் கரங்கள் ஓங்கி இருப்பதை காணமுடிகின்றது. இருப்பினும் டி20 போட்டியில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடந்து போட்டி யாருக்குவேண்டுமானாலும் சாதகமாக அமையலாம் என்பதால் இன்றைய போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.
இந்த போட்டியை ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.