WomensAsiaCup2022 : ஹேமலதா சுழலில் சுருண்ட இலங்கை..! ஆசிய கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிரணி...!
மகளிர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிருக்கான 8வது ஆசிய கோப்பை தொடர் பங்களாதேஷ் நாட்டில் இன்று தொடங்கியுள்ளது. இந்த முறை பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற உள்ளது. இம்முறை பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடர் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் முதல் போட்டியில் மோதிக்கொண்ட இந்தியா மற்றும் இலங்கை பெண்கள் போட்டி இன்று மதியம் ஒரு மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. அதனை தொடர்ந்து பேட் செய்ய களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
நான்கு ஓவருக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 23 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஜெமிமா 53 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி 76 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் சீரான் இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தாலும், அணியின் ஸ்கோர் சீராகவே இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக அணியின் ரன்ரேட் 7க்கும் குறையவில்லை. இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் எடுத்திருந்தது.
View this post on Instagram
அதனை தொடர்ந்து 151 ரன்கள் இலக்கினை நோக்கி களம் இறங்கிய இலங்கை பெண்கள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிலும் அந்த அணிக்கு ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் பேட்டிங்கே அமையவில்லை. 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது போல், இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் டயலான் ஹேமலதா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதேபோல் பூஜா மற்றும் தீப்தி ஷ்ர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்ற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.