Ambati Rayudu: அரசியலில் குதித்த வேகத்தில் வெளியேறியதற்கு முக்கிய காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த ஓரிரு வாரங்களாக அரசியல் களத்திலும் இந்திய கிரிக்கெட் களத்திலும் பேசு பொருளானது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு குறித்துதான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்தார். இவர் இணைந்தது மட்டும் இல்லாமல் அடுத்த 10 தினங்களில் கட்சியில் இருந்து விலகினார். இவர் கட்சியில் இணைந்ததும் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என பேச்சுகளும் அடிபட்டது.
ஆனால் இவர் கட்சியில் இணைந்த பரபரப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் கட்சியில் இருந்து விலகியது மீண்டும் பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அம்பத்தி ராயுடு தான் கட்சியில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன என்பது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், தான் இந்த ஆண்டு துபாயில் நடைபெறவுள்ளா இண்டர்நேஷ்னல் லீக் டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அணியான எம்.ஐ. எமிரேட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதால் தன்னால் முழுமையாக பொதுவாழ்வில் கவனம் செலுத்த முடியாது எனவே ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் அம்பத்தி ராயுடு திடீரென கட்சியில் இணைந்ததும் அடுத்த 10 தினங்களில் கட்சியில் இருந்து விலகியதற்கும் பல்வேறு காரணங்கள் ஊடகங்களில் வெளியானது. அதில், “கடந்த 5 ஆண்டுகள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில், அந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அம்பத்தி ராயுடு கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகின்றது.
I Ambati Rayudu will be representing the Mumbai Indians in the upcoming ILt20 from jan 20th in Dubai. Which requires me to be politically non affiliated whilst playing professional sport.
— ATR (@RayuduAmbati) January 7, 2024
இந்திய அணிக்காக 55 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய ராயுடு, 1694 ரன்களை குவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த இவர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இவர் 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை தோனியுடன் இணைந்து சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.