BCCI Secretary: ஜெய்ஷா கதை ஓவர்..! பிசிசிஐ-க்கு புதிய செயலாளர், யார் இந்த தேவஜித் சைகியா? கூடுதல் விவரங்கள் உள்ளே..
BCCI Secretary: இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் புதிய பொதுச்செயலாளராக, தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

BCCI Secretary: ஜெய்ஷாவின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் புதிய பொதுச்செயலாளராக தேவஜித் சைகியா தேர்வாகியுள்ளார்.
பிசிசிஐ-க்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு:
இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஜெய்ஷா, கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதைதொடர்ந்து இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா செயல்பட்டு வந்தார். இதனிடையே, பிசிசிஐ-யின் விதிகளின்படி, காலியான பதவிகளை 45 நாட்களுக்குள் முறைப்படி கூட்டம் நடத்தி நிரப்ப வேண்டும். அதன்படி, 43வது நாளான நேற்று பிசிசிஐ-யின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பிசிசிஐயின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா தேர்வானார். பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் தேர்ந்தெடுக்கப்படார். இந்த பதவியை வகித்து வந்த ஷெலார் மகாராஷ்டிரா அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பிறகு அதனை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த தேவஜித் சைகியா?
தேவஜித் சைகியா 1990 மற்றும் 1991 க்கு இடையில் நான்கு முதல் தர போட்டிகளில் விளையாடி 53 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு, சைகியா தனது 28 வயதில் வழக்கறிஞரானார் மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
55 வயதான அவர் கடந்த 2016ம் ஆண்டு கிரிக்கெட் நிர்வாகத்தில் நுழைந்தார். ஆனால் தான் ஒருபோதும் நிர்வாகத்தில் இருக்க விரும்பவில்லை என்றும், அசாமின் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்த ஊழல் சூழலால் சந்தர்ப்ப சூழல்கள் அவரைகிரிக்கெட் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்ததாக சைகியா கூறுகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பாளர்களுடனான உரையாடலில், சைகியா, "கிரிக்கட் அல்லது விளையாட்டு நிர்வாகியாக வேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை. இன்றும் எனக்கு நிர்வாகியாக இருப்பது பிடிக்கவில்லை" என்று கூறினார்.
ரோகித் உடன் சந்திப்பு:
இதற்கிடையில், புதிய பிசிசிஐ செயலாளர் சைகியா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுடன் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். செய்தி நிறுவனமான பிடிஐ மேற்கோள் காட்டிய பிசிசிஐ ஆதாரத்தின்படி, ”இந்த கூட்டத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் செயல்பாடு, என்ன தவறு நடந்தது மற்றும் அணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான மாற்றம் குறித்து விவாததிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு சில வாரங்களில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி தொடங்க உள்ளதால், பிசிசிஐ எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் தற்போது எடுக்காது என கூறப்படுகிறது.