India Cricket: இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடியது எங்கு தெரியுமா? 300 ஆண்டு கால வரலாறு..!
Indian Cricket History: விளையாட்டு என்பதையும் தாண்டி இந்தியாவில் ஒரு மதமாக போற்றப்படும் கிரிக்கெட், நாட்டில் முதன்முதலில் விளையாடப்பட்டது குஜராத் மண்ணில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
Indian Cricket History: உலக கிரிக்கெட்டின் மையமாக திகழும் இந்தியாவில் முதன் முறையாக, எப்போது கிரிக்கெட் விளையாடப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
கிரிக்கெட்டை கொண்டாடும் இந்தியா:
கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், இன்று சர்வதேச கிரிக்கெட்டின் மையாக இருப்பது என்னவோ இந்தியா தான். உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் கிரிக்கெட் சம்மேளனமாக இந்தியாவின் பிசிசிஐ திகழ்கிறது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தையே கட்டுப்படுத்தும் அளவிற்கு, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இதற்கு காரணம் கிரிக்கெட்டை கொண்டாடும் இந்திய ரசிகர்கள் தான். இனம், மதம் மற்றும் மொழி போன்ற பல்வேறு பாகுபாடுகளை கடந்து, ஒட்டுமொத்த இந்தியர்களை இணைக்கும் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பது கிரிக்கெட். ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தான் ஐபிஎல் போன்ற பணம் கொட்டும் போட்டியை சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் விதமாக வெற்றிகரமாக நடத்த முடிகிறது. இப்படி கிரிக்கெட் மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான வியாபாரமாக மாறியுள்ள கிரிக்கெட், இந்தியாவில் முதன்முறையாக எங்கு விளையாடப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
300 ஆண்டு கால வரலாறு..!
இந்தியாவில் முதன்முதலாக எங்கு கிரிக்கெட் விளையாடப்பட்டது என்பதை அறிய, 300 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள தாதர் நதிக்கரையில் அமைந்துள்ள தன்காரி பாந்தர் என்ற கிராமத்தில், 1721ம் ஆண்டு தான் முதன்முறையாக கிரிக்கெட் விளையாடப்பட்டதாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது வெறும் 6000 பேர் மட்டுமே வசிக்கும் அந்த பகுதி, அப்போது ஆங்கிலேயர்களுக்கான முக்கிய வணிக தலமாக இருந்துள்ளது. அங்கு துறைமுகம் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில், சுங்கச்சாவடி, நிரந்தர காவல்நிலையத்திற்கான கட்டடங்கள் இன்றளவும் காணப்படுகின்றன. அதோடு, ஒரு உயரமான கலங்கரை விளக்கமும் அங்கு அமமைந்துள்ளது. இந்த பகுதி வதோதராவில் இருந்து 80 கிலோ மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கிரிக்கெட்..
இந்தியாவில் கிரிக்கெட் அறிமுகமானது தொடர்பான தகவல்கள், கிளமென்ட் டவுனிங் என்ற கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த மாலுமி எழுதிய கிளமென்ட் டவுனிங்கின்"இந்தியப் போர்களின் விரிவான வரலாறு" என்ற புத்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அதில், ” 1721ம் ஆண்டு காம்பே (இன்றைய காம்பாத்) துறைமுகத்தில் இருந்து சரக்குகளை கொண்டு வந்த படகுகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கிழக்கிந்திய கம்பெனியின் 2 கப்பல்களில் நாங்கள் சென்றோம். படகுகள் குறைந்த அலையில் சிக்கித் தவித்ததால், கேம்பேயிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள "சிம்னாவ்" என்ற இடத்தில் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வேறுவழிய்ன்றி தன்காரி பாந்தரில் தங்க நேர்ந்தது. அந்த நாட்களில் தினமும் கிரிக்கெட் விளையாடியும், உடற்பயிற்சிகள் செய்தும், எங்கள் கவனத்தை திசைமாற்றினோம். நாங்கள் கிரிக்கெட் ஆடியதை உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து கண்டு ரசித்தனர்' என குறிப்பிட்டுள்ளார். இப்படி தான், இந்திய மண்ணில் முதன்முறையாக கிரிக்கெட் அறிமுகமாகியுள்ளது.
கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சி
அந்த காலத்தில் விதிகள் என எதுவும் இன்றி விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் மெல்ல மெல்ல மேம்பட்டு பிரபலமானது. தொடர்ந்து, 1744ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு என சில விதிகள் வகுக்கப்பட்டன. இந்தியாவிலும் இந்த விளையாட்டு பிரபலமாக, நாட்டின் முதல் கிரிக்கெட் கிளப் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அதைதொடர்ந்து, 1846ம் ஆண்டு மெட்ராஜ் கிளப் தொடங்கப்பட்டது. இவை இந்திய வாழ் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. ஆனால், முதன்முறையாக இந்தியர்களால் தொடங்கப்பட்ட கிரிக்கெட் கிளப் என்றால், அது 1848ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓரியண்டல் கிரிக்கெட் கிளப் தான்.
பிரபலமான இந்திய வீரர்கள்:
1912ம் ஆண்டு வாக்கில் இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் பார்சீக்கள் என பல்வேறு சமுத்தினரும் தனித்தனியே கிரிக்கெட் அணிகளை உருவாக்கி, ஐரோப்பியர்களுடன் விளையாட தொடங்கினர். இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் ரஞ்சித் சிங்ஜியும், அவரது மருமகனான துலிப் சிங்ஜியும் தான். 1928ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கப்பட்டாலும், நாட்டிற்கு என தனி அணி உருவாக தாமதமானது அந்த காலகட்டத்தில் ரஞ்சித் சிங்ஜி மற்றும் துலிப் சிங்ஜி ஆகியோர் இங்கிலாந்தில் அந்த நாட்டு அணிக்காக விளையாடினார். வெள்ளையர்களே அவர்களை கொண்டாடுவார்களாம். இவர்களின் பெயர்களில் தான் தற்போது இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் தொடர்களான, துலிப் டிராபி மற்றும் ரஞ்சி டிராபி ஆகியவை நடைபெற்று வருகின்றன. ரஞ்சித் சிங்ஜி இந்திய கிரிக்கெட்டின் தந்தை என கொண்டாப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது கிரிக்கெட் உலகையே இந்தியா ஆள்வதெல்லாம் தனி வரலாறு.