WCT20 World Cup 2023: அடி எடுத்து வைக்காத இந்தியா; அடித்து ஆடும் ஆஸி: இதுவரை கோப்பை வென்றவர்கள் யார் யார்?
WCT20 World Cup 2023: இந்த தொகுப்பில் இதுவரை நடந்த டி20 மகளிர் உலகக்கோப்பை வென்ற அணிகள் குறித்து காணலாம்.
சர்வதேச அளவில் மகளிர் டி20 கிரிக்கெட்டை வளர்ப்பதில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இந்தப் போட்டியானது கண்ணைக் கவரும் சில போட்டிகள், மயக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டை வரையறுக்கும் தருணங்களை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.
இது 2009 இல் எட்டு அணிகள் கொண்ட போட்டியாகத் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது 10 அணிகள் கொண்ட போட்டியாக உருவெடுத்துள்ளது. ஒரு அணியின் WT20I தரவரிசை மற்றும் ICC மகளிர் T20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆகியவற்றால் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
2009 இல் பெண்கள் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டித் தொடரில் இங்கிலாந்து வென்றது. அதன்பின், வந்த ஆறு போட்டித் தொடரில் பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே இருந்தது. ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஐந்து மகளிர் டி20 உலகக் கோப்பைகளை வென்று , இந்த போட்டித் தொடரில் அதிக கோப்பைகளைக் வென்ற அணி என்ற சாதனை படைத்துள்ளது. 2016 இல் மேற்கிந்தியத் தீவுகள் கோப்பையை வென்றபோது கூட ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் சிறந்த தொடர் என்றால் அது, 2020 இல் ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது தான்.
இங்கிலாந்து, மூன்று ரன்னர்-அப் முடிவுகளுடன், பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மூன்று முறை தோல்வியடைந்து அதிக மனவேதனைகளைச் சந்தித்துள்ள அணி என்று கூட கூறலாம். அதே நேரத்தில் நியூசிலாந்து இரண்டு முறை இறுதிப்போட்டில் தோல்வியடைந்த அணியாக உள்ளது.
இதுவரை கோப்பைகளை வென்ற அணிகள்;
2009 - இங்கிலாந்து
2010 - ஆஸ்திரேலியா
2012 - ஆஸ்திரேலியா
2014 - ஆஸ்திரேலியா
2016 - மேற்கு இந்திய தீவுகள்
2018 - ஆஸ்திரேலியா
2020 - ஆஸ்திரேலியா
2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 10, 2023 அன்று தொடங்கவுள்ளது.
இதில் இந்திய அணி பிப்ரவரி 12ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டவுனில் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த உலகக்கோப்பையை பொறுத்தவரையில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி குரூப் 2 இல் இடம்பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதிக்கொள்ளும், இறுதிப் போட்டி பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலக்கோப்பையில் போட்டியிட அனைத்து அணிகளும் தென் ஆப்ரிக்காவுக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் முதல்முறையாக, 2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. கேப் டவுன், க்கெபர்ஹா மற்றும் பார்லில் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.