Watch Video: ஹை.. ஜாலி.. குழந்தையாகவே மாறுனேன் மொமெண்ட்.. மழையில் ஆட்டம் போட்ட பாகிஸ்தான் வீரர்..!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் ஹசன் அலி மழையில் துள்ளிக்குதித்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டியின் 2வது நாளான நேற்று மழை கொட்டித் தீர்த்தது. இதனால், நேற்றைய போட்டியில் வெறும் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
மழையில் ஆட்டம் போட்ட ஹசன் அலி:
மழை காலை முதலே வெளுத்து வாங்கிய காரணத்தால் மைதானம் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தது. மழை பெய்து ஆட்டம் நடக்கவில்லை என்று ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் இருந்தனர். ஆனால், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஹசன் அலியோ குஷியாகிவிட்டார்.
மழை காரணமாக தார்ப்பாயால் மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. ஹசன் அலியோ கொட்டும் மழையில் மைதானத்தின் உள்ளே புகுந்து தார்ப்பாயை இழுத்து போர்வை போல போர்த்திக் கொண்டார். பின்னர், தார்ப்பாயில் தேங்கியிருந்த மழைநீரை பார்த்ததும் சிறு குழந்தை போல ஓடிச்சென்று துள்ளிக்குதித்து சறுக்கி விளையாடினார். பின்னர், அந்த தார்ப்பாயில் தேங்கிய மழைநீர் மீது ஸ்ரீரங்கநாதர் பாம்பு மீது படுத்திருப்பது போல படுத்துக்கொண்டு போஸ் கொடுத்தார்.
Hasan Ali, please never change 😂♥️ #SLvPAK pic.twitter.com/0tIZnTDdHJ
— Farid Khan (@_FaridKhan) July 25, 2023
சிறு குழந்தை போல பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி மழையில் துள்ளிக்குதித்து விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை களமிறங்கியது.
வெற்றி பெறுமா பாகிஸ்தான்?
ஆனால், இலங்கை முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபீக் 100 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் கையே ஓங்கியுள்ளது.
2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிவிட்டதால் அதற்காக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவிக்க அணிகள் போராடி வருகின்றனர். ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வெஸ்ட் இணடீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்தியா வென்று நல்ல நிலையில் உள்ளது. இதனால், இலங்கைக்கு எதிரான தொடரை வென்று வலுவான நிலைக்கு செல்ல பாகிஸ்தானும் முற்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: IND vs PAK: எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. உலகக்கோப்பை போட்டிகளில் தேதி மாற்றமா?
மேலும் படிக்க: Harmanpreet Kaur Suspended: இரண்டு போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத்...ஐ.சி.சி அதிரடி!