Harmanpreet Kaur Suspended: இரண்டு போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத்...ஐ.சி.சி அதிரடி!
இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஐ.சி.சியின் நடத்தை விதிமுறையை மீறியதற்காக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் இரண்டு போட்டிகளில் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஐ.சி.சியின் நடத்தை விதிமுறையை மீறியதற்காக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் இரண்டு போட்டிகளில் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா:
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணமாக சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் முதல் போட்டியில் வங்க தேசம் வெற்றி பெற, இரண்டாம் போட்டியை இந்திய அணி வென்றது. அதை தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி ஜூலை 22 ஆம் தேதி மிர்புரில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ட்ராவில் முடியவே, தொடரும் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது.
சர்ச்சையை கிளப்பிய ஹர்மன்ப்ரீத்தின் விக்கெட்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங் செய்ய 33 ஆவது ஓவரை வீசினார் வங்க தேசத்தின் நகிதா அக்தர். அந்த ஓவரின் நான்காவது பந்தில் நடுவரால் எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டு ஆட்டமிழந்தார் ஹர்மன்.
ஹர்மனின் ஆக்ரோஷம்:
நடுவரின் முடிவை ஏற்க மறுத்த ஹர்மன் நடுவரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்தோடு அவர் தனது பேட்டால் ஸ்டம்ப்பை அடித்து உடைத்து தனது மறுப்பை தெரிவித்தார். அதோடு நடுவரை பார்த்து ஆவேசமாக பேசியபடி டக்-அவுட் சென்றார். இத்தோடு நில்லாமல் போட்டிக்கு பின் நடைபெறும் பரிசு வழங்கும் நிகழ்வில் அம்பயர்களை விமர்சித்ததோடு கோப்பையை வாங்க வந்த வங்க தேச கேப்டனை “ நீங்கள் மட்டும் கோப்பையை வென்று விடவில்லை.. அம்பயரையும் கூப்பிடுங்கள் என்று கூறினார். இவரது இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.
அதிரடி காட்டிய ஐ.சி.சி:
முன்னதாக ஹர்மன்ப்ரீத் இவ்வாறு நடந்து கொண்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 75% அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு மூன்று டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது ஹர்மன்ப்ரீத், இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சியின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ஹர்மன், வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ஏசியன் கேம்ஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார். ஐ.சி.சியின் இந்த முடிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.