(Source: ECI/ABP News/ABP Majha)
Virat Kohli Record: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த கோலி.. சச்சினை முந்தி அசத்தல்
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளும் தீவிரம்:
தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டி-20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதலடைய முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய அணி பேட்டிங்:
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்களை சேர்த்தது. 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 42 ரன்கள் சேர்த்து இருந்தபோது, கருணரத்னே பந்துவீச்சில் அவுட்டானார்.
சுப்மன் கில் சதம்:
மறுமுனையில் நிதானமாக ஆடிய சுப்மன் கில், இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கோலி உறுதுணையக இருந்து ரன்களை சேர்க்க, கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, 89 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உடன் சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். தொடர்ந்து 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட, 116 ரன்களை சேர்த்து இருந்தபோது ரஜிதா பந்துவீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.
கோலி அதிரடி:
இதனிடையே, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சேர்த்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன்கில் ஆட்டமிழந்ததும் கோலி தனது ஆட்டத்தை வேகப்படுத்தினார். இதன் மூலம், அடுத்த 37 பந்துகளிலேயே 50 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், 85 பந்துகளிலேயே கோலி தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 46வது மற்றும் சர்வதேச போட்டிகளில் அடிக்கும் 74வது சதமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 147 ரன்களை சேர்த்து கோலி விளையாடி வருகிறார்.
Take a bow, Virat Kohli 🫡
— BCCI (@BCCI) January 15, 2023
Live - https://t.co/muZgJH3f0i #INDvSL @mastercardindia pic.twitter.com/7hEpC4xh7W
சச்சினின் சாதனை முறியடிப்பு:
3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சொந்த மண்ணில் தனது 21வது சதத்தை அடித்த கோலி, 20 சதங்களை அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.. ஒரு அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். அதன்படி, சச்சின் மற்றும் கோலி இருவரும் இலங்கைக்கு எதிராக தலா 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர். இன்றைய சதத்தின் மூலம் அந்த சாதனை பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இது அனைத்து வடிவ கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு அணிக்கு எதிராக, தனிநபரால் அடிக்கப்பட்டஅதிகபட்ச சதங்களின் எண்ணிக்கை ஆகும்.
அதிக ரன்களிலும் சாதனை:
முன்னதாக இன்றைய ஆட்டத்தில் 62 ரன்களை எடுத்தபோது, கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தார், 12,650 ரன்கள் எடுத்து ஐந்தாவது இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்தனேவை கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலி இதுவரை 46 ஒருநாள் சதங்கள், 27 டெஸ்ட் சதங்கள் மற்றும் ஒரு டி20 சதங்களை அடித்துள்ளார்.