(Source: ECI/ABP News/ABP Majha)
TNPL 2022: இன்று தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா..! முதல் போட்டியில் சென்னை - நெல்லை மோதல்..!
திருநெல்வேலியில் இன்று டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - நெல்லை நேருக்கு நேர் மோதுகின்றன.
சர்வதேச அளவில் பிரபலமான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை போன்று தமிழ்நாட்டில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கிராமப்புற வீரர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 6வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. நடப்பு தொடரின் முதல் போட்டி நெல்லை சங்கர் நகரில் இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுடன் மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஐ.பி.எல். தொடரைப் போலவே எலிமினேட்டர் சுற்று, குவாலிபையர் 1, குவாலிபையர் 2 போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது. இன்று தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக கவுசிக் காந்தியும், நெல்லை அணிக்கு கேப்டன் பாபா இந்திரஜித்தும் செயல்பட உள்ளனர்.
இந்திய அணிக்காக ஆடும் பிரபலங்களான அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகள் காரணமாக டி.என்.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர்களான விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் காயத்தால் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் மட்டும் ஜூலை 7-ந் தேதிக்கு பிறகு ஆடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எல். தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரராக ஜெகதீசன் உள்ளார். சசிதேவ், கவுசிக்காந்தி, சதீஷ், அலெக்சாண்டர், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய சாய்கிஷோர் ஆகிய வீரர்கள் ஆடுவதால் இந்த தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இதுவரை நடைபெற்ற தொடரில் சேப்பாக் கில்லீஸ் 3 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ( தற்போது சேலம் ஸ்பார்ட்ன்ஸ் அணியாக), மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளது. டி.என்.பி.எல். தொடரின் மொத்த பரிசுத்தொகை 1.7 கோடி ரூபாய் ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூபாய் 50 லட்சம் ஆகும். இதில், 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 30 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்