Temba Bavuma: பவுமா எனும் பவர்ஹவுஸ்.. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் முதன்முறை - என்னப்பா?
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா புது வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அணி தென்னாப்பிரிக்கா. ஆனால், அவர்களைப் பொறுத்தமட்டில் ஐசிசி தொடர்களில் கடைசி கட்டத்தில் சொதப்பி கோப்பையை இழப்பதே வரலாறாக இருந்து வந்தது.
148 ஆண்டில் முதன்முறை:
அந்த வரலாற்றை முதன்முறையாக மாற்றியவர் தெம்பா பவுமா. தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டிற்கு புதிய முகத்தை அளித்திருப்பவராக மாறியிருக்கிறார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்தியதன் மூலமாக 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத அரிய சாதனையை தெம்பா பவுமா படைத்துள்ளார்.
பவுமா படைத்த வரலாறு:
அதாவது, இந்த 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் ஒரு போட்டியில் கூட தோற்காமல் 10 வெற்றிகளைப் பெற்றுத் தந்த முதல் கேப்டன் என்ற பெருமையை தெம்பா பவுமா படைத்துள்ளார். அவர் இதுவரை தென்னாப்பிரிக்கா அணியை கேப்டனாக வழிநடத்திய 11 போட்டிகளில் 10 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
தோல்வியே காணாமல் அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள்:
1. தெம்பா பவுமா - 10 வெற்றிகள்
2. வார்விக் ( ஆஸி) - 8 வெற்றிகள்
3. ப்ரையன் க்ளோஸ் ( இங்கி) - 6 வெற்றிகள்
4. சார்லஸ் ஃப்ரை - 4 வெற்றிகள்
35 வயதான தெம்பா பவுமா 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர். இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் 112 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். 3 ஆயிரத்து 766 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 4 சதங்கள் 26 அரைசதங்கள் அடங்கும். 14 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். ரிக்கி பாண்டிங், லாரா, விராட் கோலி என ஜாம்பவான்கள் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் படைக்க முடியாத சாதனைகளை கேப்டனாக பவுமா படைத்து வருகிறார்.
53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1941 ரன்களை எடுத்துள்ளார். அதில் 5 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். 35 டி20 போட்டிகளில் ஆடி 670 ரன்கள் எடுத்துள்ளார். தெம்பா பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்க அணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. பலமிகுந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. நிறவெறி மிகுந்த தென்னாப்பிரிக்காவில் கருப்பின கேப்டனான பவுமா தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்காக வெற்றிகளை குவித்து வருகிறார்.
கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க வெற்றிக்கு தெம்பா பவுமாவின் பேட்டிங்கே காரணம். இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக தெம்பா பவுமா மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 55 ரன்கள் எடுத்தார். அதுவே கடைசியில் தென்னாப்பிரிக்க வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




















