Team India Barbados: இந்திய அணிக்கு என்ன ஆச்சு? கோப்பையை வென்ற பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் பார்படாஸில் தவிப்பு
Team India Barbados: ஐசிசி கோப்பையை வென்ற இந்திய அணி, பார்படாஸில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.
Team India Barbados: பார்படாஸில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியினர் உடனடியாக தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனர்.
தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய அணி:
மேற்கிந்திய தீவுகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியினர் தங்கியுள்ள பார்படாஸில் பெரில் சூறாவளி உருவாகியுள்ளது. அது "மிகவும் ஆபத்தான டைப் 4" க்கு தீவிரமடைந்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் உள்ள கடற்கரை அருகே உள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். மழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் தங்கியுள்ள விடுதிகளில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எப்போது இந்திய அணி தாயகம் திரும்பும்?
இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, “எல்லா இடங்களைப் போலவே இந்திய அணியினர் தங்கியுள்ள விடுதிகளிலும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் ஆபத்தான சூறாவளி காரணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது, எனவே புறப்படுவதில் தெளிவு இல்லை. பிசிசிஐ முழு குழுவும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்ய ஒருங்கிணைக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்படாஸில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியை மணிக்கு 130 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தாயகம் திரும்ப ஏற்பாடுகள் தீவிரம்:
2024 அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளியான பெரில், ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 130 மைல் வேகத்தில் காற்றுடன் கூடிய மிகவும் ஆபத்தான டைப் 4 சூறாவளியாக தீவிரமடைந்து, விண்ட்வார்ட் தீவுகளை நோக்கிச் சென்றது. "பெரில் இப்போது அட்லாண்டிக் பெருங்கடலில் பதிவு செய்யப்பட்ட முதல் டைப் 4 சூறாவளி மற்றும் ஜூன் மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரே டைப் 4 புயல் ஆகும். இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பார்படாஸில் இருந்து, டெல்லிக்கு நேரடியாக ஒரு சார்ட்டர் விமானம் மூலம் வந்தடைவதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது, ஆனால் அதுவும் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் போது மட்டுமே சாத்தியமாகும். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தரப்புக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு அவர்களுடன் டீம் ஹோட்டலில் இருக்கிறார்.
காத்திருக்கும் ரசிகர்கள்:
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியதன் மூலம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. இதனால், இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் சூழலில், அவர்கள் தாயகம் திரும்புவது தாமதமாகிறது. இதனிடையே, இந்திய வீரர்கள் தாயகம் திரும்பியதும், கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள் என கூறப்படுகிறது.