USA Coach: ஜாம்பவான் அணிகளை கதற விடும் அமெரிக்கா! பயிற்சியாளர் ஸ்டூவர்ட் யார் தெரியுமா?
டி20 உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணிகள் என்று கணிக்கப்பட்ட பல அணிகளுக்கும் கத்துக்குட்டி அணிகள் என்று கணிக்கப்பட்ட அணிகள் பாடம் எடுத்து வருகின்றன. அதில் அமெரிக்கா முதன்மையாக திகழ்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலே நடைபெற்று வருகிறது, டி20 உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணிகள் என்று கணிக்கப்பட்ட பல அணிகளுக்கும் கத்துக்குட்டி அணிகள் என்று கணிக்கப்பட்ட அணிகள் பாடம் எடுத்து வருகின்றன.
அச்சுறுத்தும் அமெரிக்கா:
அதில், முக்கிய அணியாக மாறியிருப்பது அமெரிக்கா ஆகும். குரூப் ஏ பிரிவில் முக்கிய அணிகளாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் உள்ளது. ஆனால், அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மோனங்க் படேல் தலைமையிலான அந்த அணியின் அபார செயல்பாட்டிற்கு காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் திகழ்கிறார். அமெரிக்க அணியை செம்மைப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் கிராண்ட் லா திகழ்கிறார்.
யார் அந்த பயிற்சியாளர்?
56 வயதான ஸ்டூவர்ட் லா முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆவார். இவர் குயின்ஸ்லாண்டில் உள்ள ப்ரிஸ்பேனின் ஹெர்ஸ்டனில் 1968ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறந்தவர். 56 வயதான இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.
ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் 1 டெஸ்ட், 54 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்டில் 54 ரன்களும், ஒருநாள் போட்டியில் 1237 ரன்களும் எடுத்துள்ளார். 367 முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடி 79 சதங்கள், 128 அரைசதங்கள் உள்பட 27 ஆயிரத்து 80 ரன்களும் எடுத்துள்ளார். 392 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆடி 20 சதங்கள், 64 அரைசதங்களுடன் 11 ஆயிரத்த 812 ரன்கள் எடுத்துள்ளார். 51 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 7 அரைசதங்களுடன் 1197 ரன்கள் எடுத்துள்ளார்.
அனுபவம் நிறைந்த லா:
ஆஸ்திரேலியா, டெர்பிஷையர், லங்காஷையர், எஸ்ஸெக்ஸ், மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப், குயின்ஸ்லாண்ட் அணிகளுக்காக ஆடியுள்ள 2009ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்தார். அதன்பின்பு, வங்கதேச அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்தார்.
ஆஸ்திரேலிய தேசிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், குயின்ஸ்லேண்ட் புல்ஸ் மற்றும் ப்ரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கும் 2013ம் ஆண்டு பயிற்சியாளராக திகழ்ந்துள்ளார். 2016ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கான தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார். பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 2017ம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார். இப்படி பயிற்சியாளராக திறம்பட பல அனுபவங்களை கொண்ட ஸ்டூவர்ட் லா தற்போது அமெரிக்க அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூப்பர் 8க்கு செல்லுமா?
அவரது பயிற்சியின் கீழ் முதல் போட்டியில் கனடாவை வீழ்த்திய அமெரிக்கா, யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்களது 2வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அமெரிக்கா பிரகாசப்படுத்தியுள்ளது. எஞ்சியுள்ள அயர்லாந்து, இந்தியா ஆகிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றாலும் அல்லது இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலோ அமெரிக்காவின் வாய்ப்பு பிரகாசம் ஆகும்
மேலும் படிக்க: IND vs PAK T20 World Cup: இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போர்.. நாளை கள நடுவர்களாக களமிறங்குபவர்கள் இவர்களே!
மேலும் படிக்க: AFG vs NZ: நியூசிலாந்தை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்.. டி20 உலகக் கோப்பையில் கலக்கும் கத்துக்குட்டி அணிகள்..!