PAK vs CAN: டி20 உலகக் கோப்பையில் தொடர! இன்றே பாகிஸ்தானுக்கு கடைசி வாய்ப்பு.. கனடாவை வீழ்த்துமா பாபர் படை..?
PAK vs CAN: இன்றும் கனடாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால், லீக் சுற்றுடன் 2024 டி20 உலகக் கோப்பைக்கு குட்பை சொல்ல வேண்டியிருக்கும்.
2024 டி20 உலகக் கோப்பையின் 22வது போட்டியில் இன்று பாகிஸ்தானும் - கனடாவும் மோத இருக்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி, நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். இன்றும் கனடாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால், லீக் சுற்றுடன் 2024 டி20 உலகக் கோப்பைக்கு குட்பை சொல்ல வேண்டியிருக்கும்.
முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி:
2024 டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணி தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது. இரு அணிகளும் மோதிய இந்த போட்டி டிரா ஆன நிலையில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது அமெரிக்கா. இதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போது லீக் சுற்றின் மூன்றாவது போட்டியில் கனடாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. இன்று கனடாவுக்கு எதிரான ஆட்டத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தால் சூப்பர்-8க்கு தகுதி பெற முடியாது.
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியும், கனடா அணியும் ஒரு போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
பாகிஸ்தான் அணி:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் ஆசம் (கேப்டன்), சைம் அயூப், ஃபகார் ஜமான், உஸ்மான் கான், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது அமீர்
கனடா அணி:
ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா (விக்கெட் கீப்பர்), தில்ப்ரீத் பஜ்வா, சாத் பின் ஜாபர் (கேப்டன்), தில்லன் ஹெய்லிகர், கலீம் சனா, ஜுனைத் சித்திக், ஜெர்மி கார்டன்
கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் பாகிஸ்தான்:
நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அனைத்து பிரிவுகளிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8க்கு முன்னேறும். குரூப்-ஏவில் உள்ள பாகிஸ்தான், சூப்பர்-8க்கு முன்னேற, கனடாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் 16 ஆம் தேதி அயர்லாந்திற்கு எதிராக பாகிஸ்தான் நான்காவது அதாவது கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறது. எனினும் இன்று கனடாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே அயர்லாந்துக்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக இருக்கும். கனடாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி எப்படி செயல்படும் என்பது இப்போது சுவாரஸ்யமாக உள்ளது.
அயர்லாந்து அணியை வீழ்த்திய கனடா:
2024 டி20 உலகக் கோப்பையில் இதுவரை மூன்று அப்செட்கள் காணப்பட்ட நிலையில் அதில் ஒன்று கனடா அயர்லாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியின் இரண்டாவது போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக நியூயார்க்கில் கனடா விளையாடியது. இந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் கனடா வீழ்த்தியது.