IND vs PAK: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மிரட்டலால் அச்சம்..! நடைபெறுமா இந்தியா - பாகிஸ்தான் போட்டி..?
2024 டி 20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி எப்போதுமே கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பை 2024ல் இரு அணிகளும் இன்று அதாவது ஜூன் 9 ம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசாப் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் வந்தது மிகப்பெரிய அச்சத்தை கொடுத்தது. இதனால், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட சென்ற இரு நாட்டு வீரர்கள், பார்வையிட சென்ற ரசிகர்களின் நிலை குறித்து பல மடங்கு கவலை அதிகரித்தது. இந்தநிலையில், பாதுகாப்பு எந்த அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து நாசாவ் கவுண்டி போலீஸ் கமிஷனர் பேட்ரிக் ரைடர் தெரிவிக்கையில், “ சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எப்படியான பாதுகாப்பு வழங்கப்பட்டதோ, அப்படியான பாதுகாப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளிடையே கொடுத்துள்ளோம். ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் இருந்து அச்சுறுத்தலுக்குப் பிறகு, பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்பதை இங்கு தெளிவுப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோசமான உறவு காரணமாக இரு நாட்டு அணிகளும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு இருதரப்பு தொடரிலும் விளையாடவில்லை. இதையடுத்து, இரு அணிகளும் ஐசிசி அல்லது ஏசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே நேரடியாக மோதிக்கொள்ளும். இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஐசிசி போட்டிகளில் ரசிகர்கள் போட்டாபோட்டியுடன் டிக்கெட்களை வாங்கி போட்டியினை கண்டுகளிப்பர். இதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் கூட இந்தியா - பாகிஸ்தான் இடையினான போட்டி சூடுபிடித்தது.
2024 டி 20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் பிளேயிங் 11 விவரம்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சைம் அயூப், ஃபகார் ஜமான், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசம் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்
இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை எப்படி..?
டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களின் இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுபுறம், பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் போட்டியை நடத்தும் அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியளித்தது.