T20 World Cup 2024: நோ பால் சம்பவம்.. ஸ்காட்லாந்துக்கு எதிராக திணறிய இங்கிலாந்து! பீதியடைந்ததாக ஒப்புக்கொண்ட மார்க் வுட்!
நான் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பீதி அடைந்தேன். விக்கெட் எடுத்து இருந்தால் கூட நான் இப்படி நினைத்து இருக்க மாட்டேன் என்று இங்கிலாந்து வீரர் மார்க் வுட் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை 2024:
உலகக் கோப்பை டி20 போட்டிகள் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கியது. அதன்படி டி20 உலகக் கோப்பை ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற 6 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
மழையால் நின்ற ஆட்டம்:
இந்த போட்டியில் மழை குறிக்கிட்டதால் போட்டியில் 10 ஓவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கியது ஸ்காட்லாந்து அணி. சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது. அப்போது போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் அதிரடி ஆட்டம் ஆடிய ஸ்காட்லாந்து அணி 10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தது.
அந்த அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் ஆடி இருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் மைக்கேல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 45 ரன்களும், ஜார்ஜ் முன்சே 31 பந்துகளில் 41 ரன்களும் குவித்து இருந்தனர்.
இதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு டி எல் எஸ் விதிப்படி 109 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 10 ஓவர்களில் இந்த இலக்கை எட்டும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததாலும், அப்போது அதிகபட்ச போட்டி நேரத்தை கடந்து விட்டதாலும் போட்டி கைவிடப்பட்டது.
பீதியடைந்தது உண்மைதான்.. ஒப்புக்கொண்ட மார்க் வுட்:
முன்னதாக இந்த போட்டியின் 5 வது ஓவரில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் நோ பால் வீசினார். கடந்த 30 போட்டிகளில் அவர் வீசிய இரண்டாவது நோபாலாக இது அமைந்தது. இந்நிலையில் தான் மார்க் வுட் அந்த போட்டியின் போது தான் பீதியடைந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 6) பேசுகையில், “உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் நான் அந்த போட்டியின்போது பீதி அடைந்தேன். விக்கெட் எடுத்து இருந்தால் கூட நான் இப்படி நினைத்து இருக்க மாட்டேன்.
அந்த போட்டியில் விக்கெட் எடுத்து இருந்தால் நான் இங்கே உட்கார்ந்திருப்பேன். ஆனால் நான் விக்கெட் எடுக்க வில்லை. என்னுடைய பந்து வீச்சு என்னை பெரிதும் ஏமாற்றம் அடையைச் செய்தது. இப்படி நடந்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என்னால் என் அணி தாழ்ந்து போனதுபோல் தோன்றியது. எனக்கு வழங்கப்பட்டது புதிய பந்து. இதானல் நான் ஏமாற்றம் அடைந்தேன்.
அடுத்த போட்டிக்கு முன் நான் நன்றாக பயிற்சி செய்வேன். இது எங்களுடைய அணியின் முயற்சியாக இருக்கும். நிச்சயமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கலக்கலாக விளையாடுவேன்” என்று மார்க் வுட் தெரிவித்துள்ளார்.